வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், திருத்தம் செய்யவும் அக்டோபர் 1 முதல் 31-ம் தேதி வரை வி்ண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
இதற்காக அக்டோபர் 7, 14, 21 ஆகிய தேதிகளில் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் அக்டோபர் 1 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2013-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியோடு 18 வயது பூர்த்தி அடையை இருப்பவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இப்போது விண்ணப்பிக்கலாம்.
தாலுகா அலுவலகங்கள், வாக்குச் சாவடிகள் ஆகிய இடங்களில் வி்ண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக அக்டோபர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவற்றை தாலுகா அலுவலகங்கள், வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வையிடலாம். இனையதளம் மூலமும் பார்க்கலாம். அக்டோபர் 6, 9 தேதிகளில் கிராம சபை கூட்டங்கள், குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்கள் ஆகியவற்றில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் முன்னிலையில் படிக்கப்பட்டு, தவறுகள் நீக்கப்படும்.
அக்டோபர் 7, 14, 21 மூன்று ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். போஸ்டர்கள், பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இது தவிர விழிப்புணர்பு ஏற்படுத்துவதற்காக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, விழிப்புணர்வு வாசகங்கள் போட்டி என பல்வேறு போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் போன்ற 23 அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்த இருக்கிறோம். இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள 4,089 வங்கிக் கிளைகள், 7,343 அஞ்சல் அலுவலகள் மூலமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்படும். இதற்காக வங்கிகளில் போஸ்டர்கள் ஒட்டப்படும். வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்தவர்கள் தாங்கள் அளித்த விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை விண்ணப்பித்த 10 நாள்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சரி பார்க்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது தொடர்பான விவரங்களைப் பெற கால் சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காலை 10 முதல் மாலை 6 மணி வரை தகவல்களைப் பெறலாம்.
2013-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி 100 சதவீதம் புகைப்படங்களுடன் கூடிய புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தவர்கள் படிவம் எண் 001சி-யை பூர்த்தி செய்து ரூ. 25 கட்டணத்துடன் விண்ணப்பித்தால் ஒரு மாதத்தில் புதிய அடையாள அட்டை வழங்கப்படும். கல்லூரிகளில் மாணவர்கள் சேரும் போதே வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்காக இந்த ஆண்டு கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பியிருந்தோம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆசிரியர்கள் மூலம் பெற்று வருகிறோம் என்றார் பிரவீன் குமார்.
No comments:
Post a Comment