தமிழகத்தில், பள்ளி வாகனங்களை பாதுகாப்புடன் இயக்க, புதிய விதிமுறைகளை அரசு வகுத்து வருகிறது. இதில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய,"ஸ்பெஷல் செல் கமிட்டி' அமைக்கும் திட்டம், செயல்படுத்தப்பட உள்ளது.
பள்ளி வாகனங்களுக்கான, அரசின் புதிய விதிமுறைகளில், "ஸ்பெஷல் செல் கமிட்டி' அமைத்து, வாகனங்களை ஆய்வு செய்ய, அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. வாகனங்களின் டிரைவர் உட்பட, உதவியாளரும் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்; குழந்தைகளை கையாளும் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள் பள்ளிகளில், பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். குழந்தைகளை, பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் சங்க கூட்டம், மாதம் ஒரு முறை கூட்டப்பட்டு, பள்ளி வாகனங்கள் குறித்த பராமரிப்பு, டிரைவர், உதவியாளர் குறித்து, கருத்துகள் கேட்கப்பட்டு, செயல்படுத்த வேண்டும். பள்ளிகளில், போக்குவரத்து கமிட்டி அமைக்க வேண்டும். இதில், போலீஸ் எஸ்.ஐ., பள்ளி நிர்வாகம் சார்பில் ஒருவர், மோட்டார் வாகன ஆய்வாளர், பெற்றோர் - ஆசிரியர் சங்க உறுப்பினர் இடம் பெறுவர்.
பள்ளி வாகனங்கள் பராமரிப்பு குறித்து, இந்த கமிட்டி முடிவு எடுக்க வேண்டும். மாவட்ட அளவில், "ஸ்பெஷல் செல் கமிட்டி' அமைக்க வேண்டும். இதில், ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், பிற துறை அதிகாரிகள், குழுவில் இடம் பெறுவர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பள்ளி வாகனங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தி, இக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற குழுக்கள் விரைவில் அமைக்கப்பட்டு, பள்ளி வாகனங்களை, விபத்தில்லாமல் இயக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
No comments:
Post a Comment