சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, ஆங்கில மொழியில் பேசும் திறனை வளர்க்கவும், கவனிக்கும் தன்மையை அதிகரிக்கவும், புதிய பயிற்சியை சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாதமே இந்தப் பயிற்சி நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் சி.பி.எஸ்.இ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பயிற்சிக்கு Assessment of Speaking and Listening Skills எனப் பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 நிமிடங்கள் இதற்கான தேர்வு நடத்தப்படும் என்றும், ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பேச்சு மற்றும் கவனிப்புத் திறமையை கண்டறிவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சியில் முதற்கட்டமாக மாணவர்களுக்கு புரியும் வகையிலான இடம், பொருள் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். அடுத்ததாக, மாணவ, மாணவிகளே தேர்வு செய்யும் வகையில் தலைப்புகள் வழங்கப்பட்டு, அதன் மீது அவர்கள் பேச வேண்டும். கடைசியாக, படக் காட்சி அல்லது தலைப்பு கொடுக்கப்பட்டு அதன் மீது மாணவர்கள் குழுவாக 3 நிமிடத்திற்கு விவாதிக்க வேண்டும். ஒருவேளை மாணவர்கள் பேச முடியாமல் திணறினால், அந்த மாணவருக்கு கூடுதல் அவகாசம் வழங்கி ஆசிரியர் தயார்படுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்படும் இந்த ஆங்கில மொழிப் பேச்சு மற்றும் கவனிப்புப் பயிற்சி, வரும் காலங்களில் பிற வகுப்பு மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படலாம் என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment