சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஏற்றத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றாலும் இந்தியாவில் எண்ணை நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றது.
மத்திய அரசும், பெட்ரோலிய பொருட்களுக்கு அளித்து வரும் மானியத்தை படிப்படியாக குறைத்து வருகிறது. தற்போது மத்திய நிதி அமைச்சகம் பெட்ரோலியத்துறைக்கு மானியம் அளிக்க போதுமான நிதி இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிந்ததும் அடுத்த வாரம் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
அதன்படி டீசல் லிட்டருக்கு ரூ.5-ம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4-ம் உயரும் என்று தகவல் வெளியானது. இப்போது சமையல் கியாஸ் விலையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.50 வரை உயருகிறது. ஆனால் மண்எண்ணை விலையில் மாற்றம் இருக்காது.
இதுபற்றி பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, பெட்ரோலிய பொருட்களுக்கு மானியம் அளிக்க நிதி அமைச்சகத்திடம் போதுமான நிதி இல்லாததால் மானியத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது.
பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைவதற்காக காத்து இருக்கிறோம். கூட்டம் முடிந்ததும் விலை உயர்வு இருக்கும் என்றார். பெட்ரோல் - டீசல் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டாலும் சமையல் கியாஸ் விலை கடைசியாக 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது. தற்போது எண்ணை நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.560 கோடியும், கடந்த நிதியாண்டு வரை மொத்த இழப்பு ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 951 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment