தமிழகம் முழுவதும் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் புதன்கிழமை நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.
தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 198 பேரும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 139 பேரும், மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் 24 பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள் 2 பேரும், சமூக நலத் துறை பள்ளிகளைச் சேர்ந்த ஓர் ஆசிரியரும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் 6 பேரும் இந்த விருதைப் பெற உள்ளனர்.
சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி இந்த விருதுகளை வழங்குகிறார். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே இந்த விருதுக்குப் பரிசீலிக்கப்படுகின்றனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆசிரியர்களாக இருந்தால் அவரது பாடத்தில் மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; தலைமையாசிரியர்களாக இருந்தால் பள்ளியின் செயல்பாடு கணக்கில் கொள்ளப்படும். தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களாக இருந்தால் அந்தப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, கல்வித் தரம், கற்பித்தலில் பின்பற்றப்படும் புதிய உத்திகள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களிடமும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமும் இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்வார்கள். மாவட்ட அளவிலான குழுக்கள் இந்த ஆசிரியர்களின் பெயர்களைப் பரிசீலித்து மாநில அளவிலான குழுவுக்கு அனுப்பும். இந்த ஆண்டு மொத்தம் 760 ஆசிரியர்களின் பெயர்கள் மாநில அளவிலான குழுவுக்கு அனுப்பப்பட்டன.
அதிலிருந்து 370 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment