இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, April 22, 2018

புத்தக தினம்

💥உலக புத்தக தினம்💥
🌹மணிகண்டபிரபு🌹

"ஒரு புத்தகத்தை திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சன்னல் திறக்கிறது" என்றார் சிந்தனை சிற்பி சிங்காரவேலர்.மனித குல வரலாற்றில் மனிதனை மேம்படுத்தியதும், மனிதனை சிந்திக்கச் செய்து சமுதாய மாற்றத்துக்கு காரணமாய் அமைந்தவையும் புத்தகங்களே!

புத்தகம் எனும் பொக்கிஷம்

சிறகு விரிந்தால் பறக்கலாம்;புத்தகம் விரித்தால் படிக்கலாம்.சிந்தனை வானில் சுயமாய் நம்மை செதுக்கலாம். கற்றல் எவ்வளவு ஆனந்தமானது என்பதை சொல்லித் தந்த புத்தகங்களை நாம்
1995 ஏப்ரல் 23ல் துவங்கி புத்தக தினத்தின் 22வது ஆண்டாக கொண்டாடுகிறோம்.

புத்தகங்களுக்காக வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களை நினைக்கும் வகையில் இந்நாள் இருக்கிறது.ஏ.கே செட்டியாரின் பயண அனுபவங்களும்,சி.சு செல்லப்பாவின் வாடிவாசலும்,புதுமைப்பித்தன் கதைகளும்,
ராகுல்ஜியின் வால்காவிலிருந்து கங்கை வரையும் இன்றும் இளைஞர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் புத்தகங்களாக இருக்கின்றன.

துவக்க நிலையில் வாசிக்க துவங்கும்போது மனதின் முரட்டுத்தனம் பக்குவப்படாமல் புரிந்து கொள்ள சிரமப்பட்டு படிப்பதை கடினமாக்குவோம்.பின் மனதும் மூளையும் பக்குவப்பட்டு சமரசம் அடையும்.கேட்டு தெரிந்து கொள்வதை விட படித்து புரிந்து கொள்ளும் போது எழுத்தின் அழகியலும்,அதன் பின்னால் உள்ள அனுபவமும் வாசிப்பின் ருசியை பருக தூண்டும்.

காகிதம்

நான் தூய்மையானவனாக படைக்கப்பட்டேன்.அப்படியேதான் இருப்பேன்.மையினால் கரைபடுவதை விட எரிந்து சாம்பலாவதே சிறந்தது என்றது வெள்ளை காகிதம்.

மைகுப்பி ஒன்று அதை கேட்டு தன்னுடைய கருத்த மனதிற்குள் சிரித்துக் கொண்டது.அதன்பின் காகிதத்தின் பக்கம் திரும்பவேயில்லை.வண்ண எழுதுகோல்களும் செல்லவில்லை.அந்த வெள்ளை காகிதம் தூய்மையாக புனிதமாக காலமெல்லாம் கற்போடு இருந்தது வெறுமையாக..என்பார் கலீல் ஜிப்ரான்.

மனிதர்களும் வீம்பாக புத்தகம் படிப்பது நேர விரயம்.பணத்திற்கு செலவு என்பார்கள்.அவர்களுக்கு தெரியவில்லை புத்தகம் என்பது அறிவுக்கான முதலீடு என்று.வாசிப்பின் இன்பத்தை உணராதவர்க்கு மேற்சொன்ன ஜிப்ரானின் கதையே போதும்.

புதியதொரு உலகத்தில் பயணிக்க வரும் நிழலாக,தான் அனுபவித்த செய்திகளை நமக்கு அறிமுகம் செய்யும் ஆசானாக விளங்குகிறது.

வாசிப்பு ஒரு தவம்

புத்தகம் படிக்கும் முன் புத்தக வாசனை நுகர்ந்து பார்ப்பது ஒரு warm up.
அதற்கு ஈடு இணை கிடையாது.

வாயில்லா பிராணியின் கண்பார்வை பேசும் பேச்சை அறிவாளியின் ஆத்மா முழுமையாய் உணர்ந்து கொள்ளும் என்ற வரிகளுக்கு சால பொருந்துவது புத்தகங்களே.கண்ணை மட்டுமே பார்த்து பேசும் கண்ணியம் உண்டு.

நேருவின் வாசிப்பு அலாதியானது.கடந்த ஆண்டுகளில் புத்தகம் படிக்க குறைவான நேரமே எனக்கு கிடைத்தது.ஆசைபடும் அளவிற்கு படிக்க நேரம் கிடைப்பதில்லை.இன்றைய வாழ்க்கை முறை பற்றிய எனது அதிருப்திகளில் ஒன்று என நேரு பதிவு செய்திருப்பார்.மேலும் அந்நாளிலேயே 'டிரிப்யூன்,'ல யூரோப்" போன்ற பல்வேறு வெளிநாட்டு இதழ்களின் சந்தாதாரராக இருந்தார்.அவரின் "உலக வரலாறு" "இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்" போன்றவை புகழ்மிக்கவை.

பாரதியை பிடிக்க முயன்ற ஆங்கிலேய அரசு அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஐரிஷ் நாட்டினர் நடத்திய பத்திரிக்கைக்கு சந்தா செலுத்தியுள்ளார் என்ற காரணம் காட்டி அவரை கைது செய்ய துணிந்ததிலிருந்து புத்தக வாசிப்புக்கு அந்நாளைய அரசாங்கம் தடை விதித்ததை காணலாம்.

காமிக்ஸ் புத்தகம்,ராஜேஸ்குமார் பாக்கெட் நாவல்களில் ஆரம்பித்து அப்துல்கலாம்,சுயமுன்னேற்ற நூல்களை படிப்போம்.அந்த கட்டத்தை கடந்தால் காண்பவை எல்லாம் அழகாய்த் தெரியும் கவிதையில் பய்ணிப்போம்.கல்லூரியில் சேர்ந்தவுடன் வரலாற்று நாவல்களில் குதிரையில் பறப்போம்.கல்கியையும் சாண்டில்யனையும் இரு கண்களாய் பார்த்து பூரிப்போம்.அதில் கொஞ்சம் தெளிவு பிறந்தவுடன் சுஜாதா எனும் பன்முக ஆளுமைக்கு வருவோம்.

சிறுகதைகள் சிறிது சிறிதாக புலப்பட ஆரம்பிக்கும்.வலிமை வாய்ந்த வல்லூறு போல் கொத்தி, ஜெயகாந்தன் நம்மை வாசிப்பு வானில் சமூக சிந்தனையுடனும்,யதார்த்த தத்துவத்துடனும் அவர் காட்டிய அனுபவ உயரத்தை அளக்க ஐம்புலன்கள் போதாது.

அடிப்படையான புத்தகங்களை படித்த பின் அடுத்த கட்ட நகர்வில் பல்வேறு மொழி பெயர்ப்பு புத்தகங்களும், நாவல்களை,கதைகளை,கவிதைகளை,கட்டுரைகளை ஆய்வு நோக்கில் அணுகும் மனப்பாங்கு வருகிறது.அது வாசித்தலில் நுனி வரை செல்லும் அனுபவம்.

நூலகம்

எளியோர்களின் போதி மரம் நூலகம் தான்.பல்வேறு மேதைகளை உருவாக்கும் பட்டறை.முந்தைய கால புத்தகங்களும்,அரிய பல பொக்கிஷங்களும் நிறைந்திருக்கும்.
முதல் பதிப்போடு நின்று போன புத்தகங்களும்,பழுப்படைந்த பக்கங்களும் எழுதிய காலத்துக்கே நம்மை அழைத்து செல்லும். நூலகம் தான் புத்தகங்களை குறிப்பிட்ட நாளில் படித்து முடிக்கவும், புத்தகங்களை தேர்ந்தெடுக்கவும் பயிற்சி அளிக்கிறது.

ஏழைகளும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,தமிழ்நாட்டின் நூலக தந்தை எனப் போற்றப்படும் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன், 1931ல் அக்டோபர் 21ல் மன்னார்குடி அருகில் மேலவாசலில் நடமாடும் நூலக வண்டிப்பயணம் தொடங்கப்பட்டது.அங்கு 72 கிராமங்ககில் 275 பயணங்கள் இந்த வண்டியில் புத்தகம் சென்றுள்ளது.ஏறத்தாழ இதில் 3782 புத்தகங்கள் 20000 தடவைக்கு மேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டு பெறப்பட்டதை நினைத்தால் புத்தகங்கள் மீது அவருக்கு இருந்த அன்பு நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

சிந்தனை மாற்றம்

புத்தக வாசிப்பில் புலமைபெற்ற பின் பேச்சிலேயே புதிய சொற்கள் பயன்படுத்துவதை காணலாம்.சிந்திக்க தூண்டும் கதைகள் கருத்தை கவரும்.

'அகிலன் எழுதிய காசுமரம்' கதையில் ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தை காசினை விழுங்கிவிடும்.வயிற்றில் இருந்து காசுமரம் முளைக்கும் என மற்றவர் சொல்லிக் கேட்டிருக்க காசினை தொடர்ந்து விழுங்க குழந்தைஇறந்துவிடும். படிக்கும்போதே அகச்சூழலில் கற்பனை ஓடும் நிகழ்வுதான் வாசிப்பின் வெற்றி.குழந்தையின் அறியாமையையும் வாழ்வினையும் நம் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

"சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு" என்பர்.

"சிந்திப்பீர்!சிந்திப்பதில் கெடுதியில்லை.சிந்திப்பதால் நீங்கள் பாவிகளாக மாட்டீர்கள்.சிந்தித்தால் தான் உங்கள் இழிவினுடைய துன்பத்தின் அஸ்திவாரம்,ஆணி வேர் எங்கிருக்கிறது என்று உங்களுக்குத் புரியும் என்றார் பெரியார்!

உலக அனுபவங்களை அறியும் பெரு முயற்சிகளில் இடையறாது ஈடுபடுவது புத்தகமே.படிப்பதன் வாயிலாக அது தனது உலகை உருவாக்கிக் கொள்கிறது.படிப்பதால் கிடைக்கும் ஆனந்தத்தில் தான் வாசிப்பு இன்னும் திகட்டாமல் இருக்கிறது.இனியொரு முறை புத்தகம் வாங்கிச் செல்வோரை ஆசையாய்ப் பாருங்கள்.அவர் கேரி பேக்கில் வாங்கிச் செல்வது புத்தகத்தை அல்ல உலகை"!

-ப.மணிகண்டபிரபு
திருப்பூர்

No comments:

Post a Comment