புதிய பாடத் திட்டப்படி தயாரிக்கப்படும் புத்தகங்கள் மே இறுதியில் வெளியிடப்படும் என்றார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். இதுகுறித்து தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையும் போட்டி போட்டு முன்னேறி வருகின்றன. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில்கொண்டு நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசின் 29 போட்டித் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்கும் வகையில் சென்னை, கோவை, திருச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட 9 மையங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில் மத்திய கல்வி வாரிய பாடத் திட்டத்தை (சிபிஎஸ்இ) விஞ்சும் வகையில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது.
மே மாத இறுதியில் இதற்கான புத்தகம் வெளியிடப்படும். அடுத்த கல்வியாண்டில் மற்ற வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும். புதிய பாடத் திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களை தயார்படுத்தும் வகையில் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேருக்கு கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்பாக பயிற்சி அளிக்கப்படும். தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அனைவருக்கும் சம உரிமை வழங்கும் வகையில் மாற்றி அமைக்கும் திட்டம் உள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை தனியாக 6 மண்டலங்களாக பிரிக்கும் உத்தேசம் இல்லை என்றார் அவர்.
No comments:
Post a Comment