சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு அடுத்த மாதத்தில் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.
சிறப்பு ஆசிரியர் தேர்வு
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் போன்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 35 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதன் முடிவு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சென்னை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக நேற்று காலை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு வந்தனர். அவருடைய வீட்டிற்கு செல்வதற்காக வெள்ளாளபாளையம் பிரிவில் நின்றிருந்தனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அவர்களை ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு செல்லும்படியும் அங்கு வந்து நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அந்த திருமண மண்டபத்துக்கு சென்றனர். காலை 7 மணி அளவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மண்டபத்திற்கு சென்று அவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் அமைச்சரிடம் மனுவாக கொடுத்தனர். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அடுத்த மாதம்
அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் கூறும்போது, “அடுத்த மாதத்தில் சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. நேர்மையான முறையில் தகுதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும். இதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை” என்றார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
No comments:
Post a Comment