இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, April 05, 2018

பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய மாற்றம்


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வி இயக்குனரகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், பள்ளிசாரா கல்வி இயக்குனரகம், அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம், இடைநிலை கல்வி திட்ட இயக்குனரகம் ஆகியவை உள்ளன.

இதில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் 5 ஆயிரத்து 850 உயர்நிலை பள்ளிகளும், 7 ஆயிரத்து 300 மேல்நிலை பள்ளிகளும் இருக்கின்றன. பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரிகளும் உள்ளனர். இந்த முதன்மை கல்வி அதிகாரிகளை மேற்பார்வை செய்ய இணை இயக்குனர்கள் (சென்னை டி.பி.ஐ. வளாகம்) இருக்கிறார்கள். இணை இயக்குனர்களை கண்காணிக்க இயக்குனர் இருக்கிறார்.

இதைப்போல தொடக்க கல்வித்துறை இயக்குனரின் கட்டுப்பாட்டில் 35 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து 800 நடுநிலை பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளை கண்காணிக்க உதவி கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க இணை இயக்குனர்களும் உள்ளனர். இணை இயக்குனர்களை மேற்பார்வை செய்ய இயக்குனர் இருக்கிறார்.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து மாவட்ட பயிற்சி நிறுவனங்களும், அனைத்து ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் இயங்குகின்றன.

அரசு தேர்வுத்துறை, அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவை வெளியிட்டும், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கியும் வருகிறது.

இந்த துறைகள் அனைத்தும் தனித்தனியாக இயங்குவதால், அதிகாரிகள், ஊழியர்கள் என ஏராளமானோர் தேவைப்படுகின்றனர். எனவே இதில் பல துறைகளை இணைத்து நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்தவகையில் தொடக்ககல்வித்துறை இயக்குனரகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் ஆகியவை ஒழிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் தமிழ்நாடு அளவில் 6 மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றுக்கு என இயக்குனர்கள் அமர்த்தப்படுவர்.

டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மட்டும் இருப்பார். அவர்தான் அனைத்து மண்டல இயக்குனர்களையும் கண்காணிப்பார். பள்ளிக்கல்வி இயக்குனர் தவிர அனைத்து இயக்குனர்களும் சென்னையை விட்டு வெளியே போய் பதவி வகிப்பார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வருடத்திற்கு குறைந்த அளவில்தான் வேலைக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கிறார்கள். எனவே ஆசிரியர் தேர்வு வாரியமும் கலைக்கப்படும் என தெரிகிறது. அவற்றின் பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இதைப்போல உதவி கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் பணியிடங்களும் ஒழிக்கப்பட்டு அவர்களுக்கு வேறு பணிகள் வழங்கப்படுகிறது. முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இப்போது உள்ள அதிகாரத்தை விட கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும்.

இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தி விரைவில் முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment