தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் புதிய பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்த தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 15 ஆண்டுகளாக பாட திட்டங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இந்நிலையில் நீட் உள்பட பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி டிசம்பரில் முடிந்தது. இந்த புதிய பாடத்திட்டத்துடன் கூடிய புத்தகங்களை வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு மட்டும் தயாரிக்கும் பணி நடக்கிறது. தரமான தாள், பக்கத்துக்கு பக்கம் வண்ணம் மற்றும் படங்களுடன் பாடங்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தயாராகி வருகிறது.மேலும் புத்தக அட்டை விரைவில் கிழியாத வகையில் லேமினேஷன் செய்யப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டுகளில் உள்ள புத்தகங்களை அச்சிட்ட செலவை விட இந்த ஆண்டுக்கான புத்தகங்கள் அச்சிடும் செலவு அதிகரித்துள்ளதால் விலையையும் அதிகரிக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.
அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் புதிய விலை ஏற்றத்தை தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1, 6, 9, 11 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் செட் விலை 350 முதல் 700 வரை கிடைக்கிறது. புதிய பாடப்புத்தகங்கள் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை விலை ஏற்றப்படுவதால் ₹850 முதல் ₹900 வரை விலை கொடுக்க வேண்டி வரும். இது தவிர மற்ற வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் 2019-2020ம் கல்வி ஆண்டில் கிடைக்கும்.
No comments:
Post a Comment