மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
1. பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பராமரிக்கப்படவேண்டும். அவ்வாறு தண்ணீர் தேங்கியிருப்பின் உடனடியாக தேங்கிய நீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. குடிநீர்பானை மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் கொசுக்களின் பெருக்கம் தடுக்கப்படுமென்பதை அறிவுறுத்தல் வேண்டும்.
3. பள்ளி வளாகம் மற்றும் வீடுகளில் கொசுக்கள் முட்டையிட ஏதுவாக உள்ள தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்ணீர் தொட்டிகள், பழைய கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வடிகால்கள், பள்ளி கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பொருட்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை தொடர்ச்சியாக கண்காணித்து, தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்குதல்.
4. பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு, சிக்குன் குனியா) அறிவுரைகளை பின்பற்றி பாதுகாத்து கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல். மேலும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும். எந்த சூழ் நிலையிலும் சுயமாக மருத்துவம் செய்து கொள்வதை தவிர்த்தல் நன்று.
5. மருத்துவரின் உதவியுடன் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் குறித்த அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வினை மாணவர்களிடையே ஏற்படுத்துதல் வேண்டும்.
6.அவ்வப்போது மாணவர்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பும், பின்பும் கைகளை கழுவுதல் அவசியம். மாணவர்கள் காய்ச்சி வடிகட்டிய பாதுகாப்பான குடிநீரை அருந்த வேண்டுமென அறிவுறுத்த வேண்டும். பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள அறிவுரை வழங்குதல் வேண்டும்.
7. பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தின் போது மாணவ, மாணவியர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்படவேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment