வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதையும், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் இடம் பெறுவதையும் தவிர்க்க, வாக்காளர் பட்டியலுடன், வாக்காளர்களின், 'ஆதார்' எண்களை இணைக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. அதற்கான அனுமதியை, உச்ச நீதிமன்றத்திடம் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நகர பகுதிகளில், வாடகை வீட்டில் வசிப்போர், அவ்வப்போது வீடு மாறுகின்றனர். அவர்கள், புதிய முகவரிக்கு சென்றதும், அந்தப் பகுதி வாக்காளராக, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர்.
அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள பெயரை நீக்க விண்ணப்பிப்பதில்லை.இதன் காரணமாக, ஒரே வாக்காளரின் பெயர், பட்டியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கிறது. இதே போல், வாக்காளர் இறந்து விட்டாலும், அவரது உறவினர்கள், அவர் பெயரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில்லை. இதன் காரணமாக, வாக்காளர்கள் எண்ணிக்கை, அதிகரித்தபடியே உள்ளது.அரசியல் கட்சியினர், கள்ள ஓட்டு போடுவதற்காக, ஏராளமானோர் பெயரை, பல இடங்களில் சேர்த்து விடுகின்றனர். உள்ளூர் அதிகாரிகள், அரசியல் நெருக்கடி காரணமாக, அவற்றை கண்டு கொள்வதில்லை.அதன் காரணமாக, தேர்தல் கமிஷனால், 100 சதவீதம், சரியான வாக்காளர் பட்டியலை தயாரிக்க முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.
அதற்கான பணிகளையும், சில ஆண்டுகளுக்கு முன் துவக்கியது. ஆதார் எண்ணை வைத்து, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. ஆனால், வாக்காளர்களின் ஆதார் எண்ணை பெற, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இதனால், வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு, மொபைல் போன் எண் போன்றவை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படுகின்றன. எனவே, 'வாக்காளர் பட்டியலுடனும், ஆதார் எண்ணை இணைக்க, அனுமதிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதனால், 'விரைவில் அனுமதி கிடைக்கும்' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்
No comments:
Post a Comment