வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி சனிக்கிழமை தெரிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது தொடர்பான உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து இந்த விளக்கத்தை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி அரசு கெஜட்டில் வெளியிடப்பட்ட, 2017ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் 2ஆவது திருத்த விதிகளின்படி, வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்கிறது. இந்த விதிகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். மேற்கொண்டு அறிவுரைகளுக்காக காத்திருக்காமல், வங்கிகள் இதை செயல்படுத்த வேண்டும் என்று அந்த அறிவிப்பில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த 2017-ஆம் ஆண்டு பட்ஜெட்டில், தனி நபர்கள் பல்வேறு நிரந்தர கணக்கு எண் அட்டைகளை (பான்) வைத்திருப்பதை தடுக்கும் வகையில், பான் அட்டைகளுடன் ஆதாரை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதுதொடர்பாக 2005-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வங்கியில் சேமிப்பு கணக்கைத் தொடங்குவதற்கும், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிக மதிப்புத் தொகையை பரிவர்த்தனை செய்வதற்கும் ஆதாரை கட்டாயமாக்கி மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதேபோல், ஏற்கெனவே வங்கியில் கணக்குகளை வைத்திருப்போர், தங்களது கணக்குகளுடன் ஆதாரை டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அந்த வங்கி அளித்த பதிலில், வங்கிக் கணக்குடன் ஆதாரை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்று உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. அதையே ரிசர்வ் வங்கி தற்போது மறுத்துள்ளது.
முன்னதாக, ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அதில் தனிநபர் ரகசியம் காத்தல் தொடர்பான வழக்கில் மட்டும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்துள்ளது. அதாவது, தனிநபர் ரகசியம் காத்தல் என்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆதார் தொடர்பான இறுதி தீர்ப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. பொதுத் துறை வங்கி அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு ஆதார் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை வெளியிடும் வரையிலும், வங்கி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளின் அதிகாரிகள் சங்கம் (ஏஐபிஒசி) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஆட்கள் பற்றாக்குறையால் வங்கிகளில் பணிபுரிவோர் நெருக்கடிக்கு ஆளாகிவரும் நிலையில், ஆதாரை வங்கி கணக்குடன் இணைக்கும் பணியை மேற்கொள்வது என்பது கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தரப்பில், சில வங்கிகள், தங்களது குறிப்பிட்ட கிளைகளுக்கு ஆதாரை புதிதாக பதிவு செய்யும் வசதிகளை செய்துதரும்படி உத்தரவிட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment