பல்வேறு அரசு திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், 2018, மார்ச், 31 வரை நீட்டிக்கப்படுவதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு அரசு திட்டங்கள், சலுகைகள், மானியங்கள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கும் மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது: மத்திய அரசு திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணைப் பதிவு செய்வதற்கான அவகாசம், டிச., 31 வரை உள்ளது. இருப்பினும் இந்த அவகாசத்தை, 2018, மார்ச், 31 வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஷியாம் திவான், 'கால நீட்டிப்பு செய்தால் மட்டும் போதாது. காலக்கெடு முடிந்தபிறகு, பதிவு செய்யாதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற உறுதியை அளிக்க வேண்டும்' என்று வாதிட்டார். இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment