சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை
-முத்துக்கமலம்
தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தில் (National Defence Academy) சேர்க்கை பெறுவதற்கான கல்வி, உடல்நிலை மற்றும் மனநிலை போன்றவைகளை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தியா முழுவதும் சைனிக் பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்பள்ளிகளில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் அமைந்திருக்கும் சைனிக் பள்ளியும் ஒன்றாக இருக்கிறது.
இந்தப் பள்ளியில் 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இடங்கள் மற்றும் தகுதி: இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பில் 80 இடங்களுக்கும், 9 ஆம் வகுப்பில் காலியாக இருக்கும் இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்பள்ளிக்கு மாணவிகள் விண்ணப்பிக்க இயலாது. 6 ஆம் வகுப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் 2.7.2007 முதல் 1.7.2008 ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
9ஆம் வகுப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் 2.7.2004 முதல் 1.7.2005ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும் மற்றும் அங்கீகாரம் பெற்ற பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு: இப்பள்ளியில் காலியாக இருக்கும் இடங்களில் எஸ்.சி. பிரிவினர் 15%, எஸ்.டி. பிரிவினர் 7.5% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டு இடங்கள் தவிர்த்து மீதமுள்ள இடங்களில் 67% இடங்கள் தமிழக மாணவர்களுக்கும், 33% இடங்கள் பிற மாநிலம், யூனியன் பிரதேசம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேர்ச்சித் தரப்பட்டியலின்படி வழங்கப்படும். மேற்காணும் அனைத்து இட ஒதுக்கீட்டிலும் 25% முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: அமராவதி நகர் சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பேடு ஆகியவை 30.11.2017 வரை வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பினைப் பெற விரும்புபவர்கள் ‘முதல்வர்,சைனிக் பள்ளி, அமராவதி நகர் - 642102, உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம்’ எனும் முகவரிக்கு அமராவதி நகரிலிருக்கும் பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் பொதுப்பிரிவினர் ரூ.400, எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் ரூ.250-க்கு வங்கி வரைவோலையைப் பெற்று வேண்டுகோள் கடிதம் இணைத்து அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்க முடியும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளிக்குச் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 5.12.2017.
நுழைவுத்தேர்வு: இப்பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 7.1.2018 அன்று நடைபெறும். 6 ஆம் வகுப்புக்கு அமராவதி நகர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலும், 9 ஆம் வகுப்புக்கு உடுமலைப்பேட்டை, புதுச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களிலும் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு அடிப்படையிலான தகுதிப்பட்டியல் 8.2.2018 அன்று வெளியிடப்படும். அதன் பின்னர் நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனை 19.2.2017 முதல் 10.3.2017 வரை நடைபெறும். இறுதியாகத் தகுதிப் பட்டியல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் 19-3-2017 அன்று வெளியிடப்படும்.
மாணவர் சேர்க்கை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் மேற்காணும் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இப்பள்ளிக்கும் தனியார் பயிற்சி மையங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.இப்படிப்புக்கான சேர்க்கை குறித்து மேலும் விவரங்களை அறிய http://sainikschoolamaravathinagar.edu.in எனும் பள்ளியின் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 04252 - 256246 எனும் பள்ளியின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.
No comments:
Post a Comment