நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்துவதற்கு கூடுதலாக 23 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று நள்ளிரவுக்குள் தங்களின் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளலாம்.நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு பிப்ரவரி 1ம் தேதி மசோதா நிறைவேற்றியது. ஆனால் இதுவரை அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்காக கடந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 80 மையங்களில் (தமிழகத்தில் 5 மையங்கள்) கடந்த ஆண்டு நீட் தேர்வு நடந்தது. இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதால், நாடு முழுவதும் புதிதாக 23 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
அந்த நகரங்களின் பட்டியல் http://cbseneet.nic.in இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு அளித்து இன்று நள்ளிரவு 12 மணிக்குள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம். தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மையங்களில் மாற்றிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment