நாடு முழுவதும் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 16–ந் தேதி (நாளை மறுநாள்) மத்திய அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 1¼ லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்கிறார்கள்.
20 அம்ச கோரிக்கைகள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிபந்தனை இன்றி அரசு தொடர வேண்டும், ஊழியர் அடிப்படை ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் 16–ந் தேதி (நாளை மறுநாள்) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசு ஊழியர்கள் நடத்தும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–
பேச்சுவார்த்தை
7–வது ஊதியக்குழு அறிவிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு (2016) வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, சங்க பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து பேச்சுவார்த்தை வாக்குறுதிகளை நம்பி போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் இந்த கமிட்டிகள் அமைக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் நம்பிக்கை தரும் எந்தவித அறிக்கையும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துபடி உள்ளிட்டவையும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை.
1¼ லட்சம் பேர் பங்கேற்பு
இதையடுத்து மத்திய அரசுக்கு ஒரு அழுத்தம் தரவேண்டும் என்ற வகையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை கையில் எடுக்க முடிவு எடுத்துள்ளோம். தபால்துறையில் கிராமப்புற ஊழியர்கள் 2½ லட்சம் பேருக்கு கமிட்டி பரிந்துரைகளின் படி பணிஆணை வழங்கவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிபந்தனையின்றி அரசு தொடர வேண்டும், அடிப்படை ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 16–ந் தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
இதில் தபால் துறையின் அனைத்து சங்கங்கள், வருமான வரித்துறை சங்கங்கள், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள்–ஊழியர்கள், ராஜாஜி பவன், சாஸ்திரி பவன் ஊழியர்கள் என 105 சங்கங்களின் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த 1¼ லட்சம் பேர் உள்பட நாடு முழுவதும் 12½ லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment