ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் வரும் 10ம்தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதி தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு 2014ல் நடத்தப்பட்டது.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றுள்ளவர்களை கொண்டு, பள்ளி கல்வித் துறையில் 286 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 623 பின்னடைவு பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் உள்ள 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரிய இணையதளத்தில் வரும் 10ம்தேதி வெளியிடப்பட உள்ளது. பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரங்களை பதிந்து தெரிந்து கொள்ளலாம். பதிவெண் மறந்துவிட்டால் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து தெரிந்து கொள்ளலாம்.
தகுதியானவர்கள் தங்களின் ஒரு சில விவரங்களை திருத்தவும், மேம்படுத்தவும் வேண்டும் என்றால், ஆன்லைனில் மேற்கொள்ளலாம். தங்களின் அசல் ஆவணங்களை கொண்டு விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த விவரங்களை வரும் 10ம்தேதி காலை 10மணி முதல் 20ம்தேதி இரவு 10மணிக்குள் இணையதளத்தில் சரிபார்த்து திருத்தம் தேவை எனில், இணையதளம் மூலம் மட்டுமே திருத்தம் செய்து கொள்ள முடியும். நேரடியாகவோ, எழுத்து மூலமோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
No comments:
Post a Comment