அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரகால மகப்பேறு விடுப்பு வழங்க வகை செய்யும் புதிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தாய்மை அடையும்பட்சத்தில், அவர்களுக்கு 12 வாரகால மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த விடுப்பினை 26 வாரகாலமாக உயர்த்தும் வகையில் பழைய மகப்பேறு சட்டத்தில் மத்திய அரசு அண்மையில் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பாக வழங்க வேண்டும்; குழந்தை பேறு இல்லாத பெண்கள், மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையை தத்தெடுக்கும்பட்சத்தில் அவர்களுக்கு 12 வாரகால விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இந்தப் புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த 26 வாரகால மகப்பேறு விடுப்பானது, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கு மகப்பேறு விடுப்பாக 12 வாரங்கள் வழங்கப்படும்.
இது, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
இந்த சட்டத்திருத்த மசோதாவானது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்தச் சட்ட வரைவு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment