பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு வினாத்தாளில், சில வினாக்களுக்கு, விடையை கண்டறிவதில், தமிழ், ஆங்கில வழி மாணவர்களுக்குள் முரண்பாடு ஏற்படுகிறது. 'பொருத்துக, கோடிட்ட இடத்தை நிரப்புக' பகுதிகளிலும், பிரச்னை ஏற்படுகிறது. இந்த ஆண்டு தேர்வில், பல குளறுபடிகள் இருந்தாலும், 10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், 'பொருத்துக' பகுதியில், விடையை மாற்றி கொடுத்ததால், அதிகபட்சம், ௫ மதிப்பெண்களுக்கு, மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, 5 மதிப்பெண்ணுக்கான, 'பொருத்துக' பகுதியில், அதிக மழை பொழியும் பகுதி கேட்கப்பட்டிருந்தது. இதற்கான விடைகளை, வினாத்தாளில் உள்ள குறிப்புகளில் இருந்து, சரியாக தேர்வு செய்ய வேண்டும். இந்த கேள்விக்கு, சரியான விடையாக, 'ஷில்லாங்' என்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், பலருக்கு இந்த விடை தெரியவில்லை. அதற்கு, பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த குளறுபடியான அம்சமே காரணம். தமிழ் வழி பாட புத்தகத்தில், அதிக மழை பொழியும் பகுதியாக, 'மவ்சின்ராம்' என்ற கிராமத்தின் பெயர் உள்ளது. ஆங்கில வழியில், 'ஷில்லாங் பீடபூமி பகுதியில் உள்ள மவ்சின்ராம் கிராமம், உலகில் அதிக மழை பெறும் பகுதி' என கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில புத்தகத்தின் அடிப்படையில், வினா தயாரிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களை சிந்திக்க வைத்து, பதில் எழுத வைப்பதற்காக, மவ்சின்ராம் என்பதற்கு பதில், 'ஷில்லாங்' என்ற விடையை, வினாத்தாளில் இடம்பெற வைத்துள்ளனர்.
தமிழ் வழி மாணவர்களுக்கு, மவ்சின்ராம் மட்டுமே, பாட புத்தகத்தில் படித்ததால், ஷில்லாங் என்ற விடையை தவிர்த்து, தவறான விடைகளை தேர்வு செய்துள்ளனர்.இந்த தவறால், மற்ற நான்கு கேள்விகளுக்கும், தவறான விடை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனால், ஒட்டுமொத்த பொருத்துக பகுதியும், தவறான விடையாகி, ஐந்து மதிப்பெண் வரை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment