நடப்பாண்டில் "நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 41.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவ பட்டப்படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான "நீட்' தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) நாடுமுழுவதும் ஆண்டு தோறும் நடத்துகிறது. இந்த நுழைவுத் தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு கடந்த ஆண்டு விலக்கு அளித்திருந்த நிலையில், நடப்பாண்டில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய இடைக்கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2016 ஆம் ஆண்டு நாடு முழுவதும் "நீட்' தேர்வை எழுத விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 2594 பேர். தற்போது 2017 ஆம் ஆண்டில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை "நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை விட இது மிக அதிகம். நடப்பாண்டுக்கான நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 7 -ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு நுழைவுத் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்கெனவே இந்தத் தேர்வு 80 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 23 நகரங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் 2,200 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களோடு தற்போது வேலூர், நாமக்கல், திருநெல்வேலியிலும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment