'பை' என்றால் பொருட்கள் எடுத்துச் செல்லும் பை தான், அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால் கணித நிபுணர்களிடம் கேட்டால், 'பை என்றால் கணிதத்தில் ஒரு முக்கிய எண் (π)' என்று, சரியாக சொல்லி விடுவார்கள்! ''எங்கெல்லாம் வட்ட வடிவம் தோன்றுகிறதோ, அங்கெல்லாம் 'π ' என்கிற இந்த முக்கிய எண் தோன்றுகிறது.
இதன் மதிப்பு, 3.14. பெரும்பாலான பொருட்கள், வட்ட வடிவத்தில் காணப்படுவதால், இயற்கையோடு, பை பின்னிப் பிணைந்துள்ளது,'' என்கிறார், கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் உமாதாணு. 'கணிதம் இனிக்கும்' எனும், தனது சமீபத்திய புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக, பரவலாக அறியப்படுபவர் இவர். கணிதத்தில் மிக முக்கிய எண்ணாக, π விளங்குவதாலும், அதன் மதிப்பு தோராயமாக, 3.14 என வருவதாலும், மார்ச் 14 என்ற தேதி வாயிலாக, πயை அமெரிக்கர்கள் நினைவுகூர்கின்றனர். இது குறித்து உமாதாணு கூறியதாவது: கன வடிவங்களான கோளம், கூம்பு, உருளை போன்றவற்றின், மேற்பரப்பு, கொள்ளளவு ஆகியவற்றை கணக்கிட, பை பயன்படுத்தப்படுகிறது. ஒரு கோளத்தின் சுற்றளவை, விட்டத்தால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பே π. இதை கண்டு பிடித்த கிரேக்க கணித மேதை ஆர்க்கிமிடீஸ், அவரது மொழியில், π என அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த அடையாளத்துக்கு தோராயமாக, 3.14 என்ற எண்ணை பயன்படுத்தினார். π-ன் மதிப்பு, கோள்களின் சுழற்சிக் காலம் போன்ற எண்ணற்ற முக்கிய விஷயங்களுக்கு பயன்படுகிறது.
வில்லியம் ஜோன்ஸ் என்ற கணித அறிஞர், 1706-ல் π என்ற எண்ணுக்கு இன்று நாம் பயன்படுத்தும் குறியீட்டை அறிமுகப்படுத்தினார். அன்றாட வாழ்வில் இதன் முக்கியத்துவத்தை, உலகுக்கு உணர்த்த, 1988 முதல் லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர், பை தினத்தை முதலில் கொண்டாடினார். அமெரிக்காவில் சில மாகாணங்களில், π தினத்தைக் கொண்டாட, விடுமுறையே அளிக்கப்படுகிறது. πக்கு வட்டத்துடன் நேரடிதொடர்புள்ளதால், வட்ட வடிவில் கேக்குகள் மற்றும் இனிப்பு வகைகளை தயார் செய்து, விழா நிறைவு பெற்றதும் உண்டு மகிழ்வார்கள்.
இதன் மதிப்பை, பாபிலோனியர்கள் 25/8 என்றும், எகிப்தியர்கள் 256/81 என்றும், டாலமி என்ற அறிஞர் 377/120 என்றும், கிரேக்கக் கணித மேதை ஆர்க்கிமிடிஸ் 22/7 என்றும், சீனர்கள் 355/113 என்றும், இந்தியாவின் ஆர்யபட்டர் 62832/20000 என்றும் பின்பற்றினர். கணினியின் துணை கொண்டு பல அறிஞர்கள் π-ன் மதிப்பை இன்று, 13 டிரில்லியன் தசம இலக்கங்களுக்கு மேல் கண்டறிந்துள்ளனர். ஒரு கணினி, முறையாக வேலைசெய்கிறதா எனத் தெரிந்துகொள்வதற்கு, π-ன் தசம இலக்க கணக்கீடுகள் பயன்படுகின்றன. தமிழகத்தில், வேலுார் பல்கலை மாணவர் ராஜ்வீர் மீனா, 2015 மார்ச் 21ல், π-ன் உண்மை மதிப்பை, கண்களை மூடிக்கொண்டு சரியாக ஒப்பித்து, புதிய கின்னஸ் சாதனை படைத்தார். கணிதத்தில் மிகவும் முக்கியமான π என்ற எண் குறித்து, நம் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பை பிறந்த நாளை, நம் பள்ளிகளிலும் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினால், இது போல் பல புதிய கணித கண்டுபிடிப்புகள், நம் மாணவர்களிடம் இருந்தும் உருவாகலாம். இவ்வாறு, உமாதாணு கூறினார்.
காதலர் தினம் போன்ற பயனற்ற நாட்களை கொண்டாடுவதை விட்டு, விட்டு, இன்று முதல் பள்ளிகள்தோறும், 'பை தினம்' கொண்டாடுவோம். எங்கே சொல்லுங்கள்... ஹேப்பி பை டே!
No comments:
Post a Comment