தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை 2017-2018-ஆம் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் பள்ளிக் கல்விக்காக ரூ.26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புவியியல் தகவல் முறைமையின்படி தயாரிக்கப்பட்ட பள்ளி இருப்பிட வரைபடச் செயலி உதவியுடன் கல்வி வசதி இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை 226 புதிய ஆரம்ப பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பள்ளிகள் தொடங்குவதற்கு சாத்தியமற்ற பகுதிகளில் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசால் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் (2017-2018) மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
250 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 113 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 2017-2018-ஆம் கல்வியாண்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், குடிநீர் வசதி, சாய்வுதளங்கள், மாணவ-மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள் உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2016-2017-ஆம் ஆண்டில் ரூ.440.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் சுகாதாரத்தை பேணுவதற்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளிகளுக்கு ரூ.57.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரு.352 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 3.28 லட்சம் குழந்தைகள் சேர்ப்பு: குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 3 லட்சத்து 28,910 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, பிளஸ் 2 வகுப்பு மாணவிகளின் பள்ளி இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 வழங்க ரூ.314 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பள்ளிக் கல்விக்காக 2017-2018-ஆம் நிதியாண்டில் ரூ.26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment