பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வரும் ஏப்ரல் 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று சென்னையில் நடந்த அனைத்து துறை ஊழியர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு கூட்டம் மாநில அமைப்பாளர் மு. சுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதில், 64 துறைவாரி சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சனை வழங்க வேண்டும். 1.1.2016 முதல் 20 சதவிதம் இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்து காலியாகவுள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் பேரணி நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும். ஏப்ரல் 8ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது, ஏப்ரல் 15ம் தேதி திருச்சி நகரில் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
No comments:
Post a Comment