இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, February 23, 2017

TNPTF news

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் ச.மோசஸ்,பொதுச்செயலாளர் செ.பாலசந்தர்,பொருளாளர் ச.ஜீவானந்தம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை

தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஊதிய மாற்றக்குழுவை அறிவித்துள்ளதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.அதே நேரத்தில் கடந்த ஊதியக்குழுவில் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி உடனடியாகக் களையப்பட வேண்டும் என்பதையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. 

மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழுவை 01.01.2006 முதல் அமல்படுத்தியது.  அதன்படி தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு ஊதிய மாற்றக்குழுவை அமைத்து அரசாணை எண் : 234 நாள் 01.06 2009ன் மூலம் புதிய ஊதியக் விகிதங்களை அமல்படுத்தியபோது தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆசிரியர்கள் 44 ஆண்டுகாலம் போராடிப் பெற்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்டதால் கடந்த எட்டு ஆண்டு காலமாக தமிழக இடைநிலை ஆசிரியர்கள் உள்ளகுமுறலோடும்,கொந்தளிப்போடும்,வேதனையோடும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழக இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பறிக்கப்பட்டதால் அடிப்படை ஊதியத்தில் மட்டும் மாதந்தோறும் 5500 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  அவ்வாறு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பைச் சரிசெய்து அதன் பின்பு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல் படுத்துகிறபோதுதான் இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பது நிறைவேறும் என்பதை தமிழக அரசும் ஊதிய மாற்றக்குழுவும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பறிக்ககப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக்கோரி பல்வேறு கூட்டுப் போராட்டங்களிலும்,தனிச்சங்கப் போராட்டங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிற இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.  தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல்,தமிழக அரசு எட்டாவது ஊதிய மாற்றக் குழுவை உடனடியாக அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2016 பிப்ரவரி15ம் தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து மறியல் போராட்டம்,காத்திருப்புப் போராட்டம் எனக் கடுமையான போராட்ட நடவடிக்கைகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈடுபட்டது.

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்;டணி தனிச்சங்க நடவடிக்கையாக உச்சகட்டப் போராட்டமாக கடந்த 03.02.2017 அன்று தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தியது.

அம்முற்றுகைப் போராட்டத்தின் போது பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி.சபிதா அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம்,தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்தல் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக துறைரீதியாக தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  தற்போது அமைக்கப்பட்டுள்ள ஊதிய மாற்றக் குழுவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களும் இடம் பெற்றிருப்பது என்பது பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக நாம் எதிர்பார்க்கிறோம்

எனவே,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முற்றுகைப்போராட்டமானது தமிழக அரசு ஊதியமாற்றக்குழுவை அமைப்பதற்கு ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.  அதே நேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் 3முறை நீட்டிக்கப்பட்டது போல் ஊதியமாற்றக்குழுவின் நிலையும் ஆகிவிடக்கூடாது என்பதையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுட்டிக்காட்டுகிறது.

எனவே, தமிழக அரசு காலதாமதமாகவே அமைத்;திருக்கிற ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை நான்கு மாத காலத்திற்குள் பெற்று உடனடியாக அதை அமல்படுத்த வேண்டும்.  அதற்கு முன்பாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் களையப்படவேண்டும்.  தமிழக அரசு உடனடியாக தனது ஊழியர்களுக்கு 01.01.2016 முதல் 20 சதவீதம் ஊதியத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்.  தமிழக அரசு தனது ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

           இவண்

செ.பாலசந்தர்

பொதுச்செயலாளர்

     தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment