மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றுவதற்காக, ஐந்து பேர் கொண்ட, அலுவல் குழு அமைத்து, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். கடந்த ஆண்டு, சட்டசபை தேர்தல் அறிக்கையில், 'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதும், தமிழக அரசு பணியாளர்களுக்கும், ஊதிய விகிதங்கள் மாற்றப்படும்' என, ஜெ., அறிவித்தார். அவரது அறிவிப்பை செயல்முறைப்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று, முதல்வர் பழனிசாமி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை செயலர் சண்முகம் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கான பரிந்துரைகள் அளிக்க, அலுவலர் குழு அமைக்க, முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, நிதித் துறை கூடுதல் தலைமை செயலர், உள்துறை முதன்மை செயலர், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் உறுப்பினர் செயலராக, உமாநாத் இருப்பார். இக்குழு, மத்திய அரசின் திருத்திய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், திருத்திய ஓய்வு கால பயன்கள் குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகள் அளிக்கும். மேலும், இதர படிகள் தொடர்பாகவும் ஆராய்ந்து, உரிய பரிந்துரைகளை வழங்கும்.அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்கங்கள், தங்கள் கோரிக்கைகளை, இக்குழுவுக்கு அனுப்பி வைக்கலாம். குழு, தன் அறிக்கையை, ஜூன், 30க்குள் அளிக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment