முதல்வரின் சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா செய்துள்ளதால், பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்திருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.2004ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். இதுபற்றி, ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர்.
இந்நிலையில், கடந்த 17-2-2016 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட சிறப்பு குழு அமைக்கப்படும். அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்று கூறினார்.அப்போதைய முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியான சாந்தா ஷீலா நாயர் தலைமையில் 5 பேர் குழு 26-2-2016 அன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசினர். குழு அமைக்கப்பட்டு 4 மாதம் ஆகியும் அரசுக்கு பரிந்துரை செய்யாததால் இந்த குழு முறையே 25-6-16 மற்றும் 25-9-2016 என இரண்டு முறை 3 மாதம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக இந்த குழுவின் நீட்டிப்பு காலம் 26-12-2016 அன்று முடிவடைந்தது. ஆனால், கடந்த 40 நாட்களாக நீட்டிக்கப்படாமல் அந்த கோப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையிலேயே தூங்கியது.
இந்நிலையில் முதல்வரின் அலுவலக சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் குழுவின் தலைவர் பதவியும் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து சென்னை தலைமை செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன், அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க தலைவர் கே.கணேசன் ஆகியோர் கூறும்போது, “புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், அந்த குழுவின் தலைவர் ராஜினாமா செய்துள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது.
குழுவின் தலைவர் ராஜினாமா செய்தாலும், அந்த குழுவின் அறிக்கையை அவரிடம் இருந்து பெற்று தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். 2004ம் ஆண்டுக்கு பிறகு, புதிய பென்ஷன் திட்டத்தால் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த உத்தரவாதத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்றனர்.
No comments:
Post a Comment