உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் விதத்தில், பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, தேசிய தேர்வு முகமை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியதாவது: தரமான உயர் கல்வி, தற்போது முக்கிய தேவையாக உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில், உயர் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, தனியாக, தேசிய தேர்வு முகமை உருவாக்கப்படும்.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உட்பட, மத்திய அரசின் பிற நிறுவனங்கள், நிர்வாகத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றன. அதேசமயம், உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேர்வில், கல்வியின் தரத்தை கவனத்தில் கொள்ள, தனி அமைப்பு தேவைப்படுகிறது; இதற்காகவே, தேசிய தேர்வு முகமை உருவாக்கப்படுகிறது. அதுபோலவே, தரமான கல்வி மற்றும் புதிய பாடத் திட்டங்களில், கவனம் செலுத்தப்படும்; நாடு முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளில், புதிய கல்வி முறையை அமல்படுத்த பரிசீலித்து வருகிறோம். இணையதளங்கள் மூலம், தானாக பயிலும், மத்திய அரசின், 'ஸ்வயம்' திட்டத்தின் கீழ், 350 பாட வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தும், பல்கலைக்கழக மானியக் குழுவின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கல்லுாரிகளின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டு, தரவரிசை பட்டியல் வழங்கப்படும்; அதன் அடிப்படையில் கல்லுாரிகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வியாளர்கள் வரவேற்பு : மத்திய பட்ஜெட்டில், நுழைவுத் தேர்வுக்கு, தனி முகமை அமைக்கும் அறிவிப்பை, கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர். ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்: நுழைவுத் தேர்வுகளை நடத்த, தனியாக ஒரு அமைப்பு வேண்டுமென, பல ஆண்டுகளாக கல்வியாளர்கள் கோரினர். அதன்படி, தேசிய தேர்வு முகமை அமைக்கப்பட்டு உள்ளது.
இதில், அரசியல் குறுக்கீடுகள் இன்றி, தேர்வுகளை நடத்த வேண்டும். அனைத்து பாடத் திட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், தேர்வு நடத்த வேண்டும். 'கல்விக்கடனின் உச்சவரம்பு, 10 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும்' என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான்கு லட்சம் ரூபாயில் இருந்து, கல்விக் கடன் உயர்த்தப்படவில்லை. திறன் அடிப்படையிலான தேசிய கல்வி நிறுவனங்கள் அமைக்கவோ, ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.டி., போன்று, பொருளியல், வணிகவியல் தொடர்பான, தேசிய கல்வி மையம் குறித்த அறிவிப்புகளோ இல்லை. அஜீத் பிரசாத் ஜெயின், கல்வியாளர் மற்றும் சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர்: பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது. இது, கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும். இதுவரை, சி.பி.எஸ்.இ., நடத்தி வந்த பல நுழைவுத் தேர்வுகள், தேசிய தேர்வு மையம் மூலம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சி.பி.எஸ்.இ., அமைப்பு மற்றும் பள்ளிகளுக்கு, சுமை குறையும் என்பதால், அவை, மாணவர் நலனில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.
என்.பசுபதி, பொதுச்செயலர், அனைத்து பல்கலை ஆசிரியர் சங்கம்: 'பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சீரமைக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, யு.ஜி.சி.,யின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. உயர் கல்வியின் தரத்தை இன்னும் உயர்த்த, பல்வேறு அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், மத்திய பல்கலைகள் கூடுதலாக திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. தேசிய அளவில் உயர் கல்வியில் மாற்றம் கொண்டு வருவது குறித்து, இன்னும் பல திட்டங்களை அறிவித்திருக்கலாம். கல்லுாரிகளுக்கு, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து, கட்டுப்பாடுகளும் கொண்டு வந்திருக்க வேண்டும்.
இவ்வாறு கல்வியாளர்கள் கூறினர்.
No comments:
Post a Comment