தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய ரூ.300 கோடியை வழங்கினால்தான், இந்த கல்வி ஆண்டில் இலவச கல்விக்கான மாணவர்களை சேர்ப்போம் என்று தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன. கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்களில்,சமூகத்தில் நலிந்த இயலாத பிரிவு மற்றும் ஆதரவற்ற பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்கப்பட வேண்டும். அதற்கான செலவை மாநில அரசு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த சட்டத்தின் கீழ் அந்தந்த மாநில அரசுகள் அரசாணைகள் பிறப்பித்தன. தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி தனியார் பள்ளிகள் நடத்துவோர், தங்கள் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவியரை சேர்க்கும் போது, அதில் 25 சதவீதம் இடங்கள், நலிந்த பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கி இலவச கல்வி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசாணை நடைமுறைக்கு வந்த பிறகு, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. அதற்கான நிதியை தமிழக அரசு வழங்கவில்லை என்று தனியார் பள்ளிகள் குற்றம்சாட்டி வந்தன.
இதையடுத்து கடந்த 2014-2015ம் ஆண்டு வரை உள்ள பாக்கியை அரசு வழங்கியது. 2015-2016ம் ஆண்டு 25 சதவீத அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். அந்த ஆண்டுக்கான செலவுத் தொகை ரூ.125 கோடி, 2016-2017ம் ஆண்டும் அதே அளவு குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். அதற்கு ரூ.125 கோடி என மொத்தம் ரூ.250 கோடி அரசு தரப்பில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. பாக்கியுள்ள தொகையை அரசு வழங்கினால் தான் இந்த ஆண்டில் 25 சதவீதத்தின் கீழ் குழந்தைகளை சேர்ப்போம். இல்லை என்றால் சேர்க்கமாட்டோம் என்று தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன. இது குறித்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தரப்பில் கூறப்படுவதாவது: கடந்த 2015-2016ம் ஆண்டுக்கான செலவுத் தொகை ரூ.125 கோடியை வழங்க சட்டப் பேரவையில் அறிவித்தனர். அதனால் அந்த தொகை விரைவில் வழங்கப்படும். மற்ற ஆண்டுக்கான தொகையும் அரசு விரைவில் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment