தமிழக இறுதி வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல்
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
1.1.2017–ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 1.9.2016 அன்று வரைவுப்பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 1.9.2016–ம் தேதியில் இருந்து 30.9.2016–ம் தேதி வரை பெறப்பட்டன. இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது பெயர் சேர்த்தலுக்கு 15,85,603 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 15,04,233 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப்பதிவு ஆகியவற்றின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட நீக்கல்கள் 3,84,369 ஆகும்.
5.92 கோடி வாக்காளர்கள்
திருத்தல்களுக்கு 10,50,192 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 10,46,784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம் செய்ய 2,51,257 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 2,33,561 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
2017–ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 5.92 கோடி வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் – 2.93 கோடி, பெண் வாக்காளர்கள் – 2.99 கோடி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 5,040) உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சுமார் 6 லட்சம் பேர் அதிகம் உள்ளனர்.
புதிய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 10.2.2017 வாக்கில் வழங்கப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி காஞ்சீபுரம் மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி ஆகும். இங்கு மொத்தம் 6,22,333 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் – 3,12,816, பெண்கள் – 3,09,443, மூன்றாம் பாலினத்தவர் 74). இத்தொகுதியில் 18–19 வயதுடைய 7,935 இளைய வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் – 4,278, பெண்கள் – 3657).
தொடர் திருத்த நடைமுறை
தமிழகத்தில் குறைந்த வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர்(தனி) சட்டமன்ற தொகுதி ஆகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,66,920 ஆவர். (ஆண்கள் – 82,515, பெண்கள் – 84,404, மூன்றாம் பாலினத்தவர் 1).
பணித்தொகுதி வாக்காளர் அதிகமுள்ள சட்டமன்ற தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் சட்டமன்ற தொகுதி ஆகும். (2,806 பேர்).
வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 624 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. தகுதியுள்ள எவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமலிருந்தால், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தின் மூலமாக இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Wednesday, January 04, 2017
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment