தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைப்பதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு மூலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பிரிவின் மூலம் பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், உள்துறை, நீதிமன்றம், போக்குவரத்து, மீன்வளம், சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கான கட்டுமான பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ரூ.2000 கோடிக்கு மேல் பொதுப்பணித்துறையின் கீழ் மற்ற அரசு துறைகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரி கட்டிடங்கள், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி, நீதிமன்றம் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி ( ஆர்.ஓ. பிளான்ட்) அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, 200 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிகள், அண்ணா பல்கலை, ஐஐடி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், மருத்துவமனைகள், திருவண்ணாமலை நகராட்சி பள்ளிகள், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டிவனம் அரசு கலை கல்லூரி, திருவள்ளூர் தர்மபுரி ஆரம்பசுகாதார மையம், கே.கே. நகர் புறநகர் மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களில் ஆர்.ஓ. பிளான்ட் அமைக்க தேர்வு செய்யப்பட்டது. இதற்காக பொதுப்பணித்துறையின் மூலம் டெண்டர் விடப்பட்டது. ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 ஆர்.ஓ. பிளான்ட் 6.50 லட்சம் என திட்ட மதிப்பீடு தனியார் நிறுவனத்திடம் இருந்து பொதுப்பணித்துறை பெற்றுள்ளது.
அந்த நிறுவனத்தின் அறிக்கையின் படி ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் மூலம் சம்பந்தபட்ட இடங்களில் ஆர்.ஓ. பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு ஆர்.ஓ. பிளான்ட் அமைக்க ரூ.2.50 லட்சம் மட்டுமே செலவாகும் நிலையில் கூடுதலாக 4 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் தகவல் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment