தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அவர்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி அமர்த்த வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2010–ம் ஆண்டு அறிவித்தது.
அதில் இருந்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி அமர்த்தப்படுகிறார்கள். கடந்த 2014–ம் ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். காத்திருக்கும் பட்டியலில் இருந்து தான் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு
பள்ளி கல்வித்துறையின் அரசு தேர்வுத்துறையால் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு நடைபெறுவது தள்ளிப்போகாது. ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்.
ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு நடக்கும் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் விரிவான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.
No comments:
Post a Comment