புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு, அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக, 15.04 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர் களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ஜன., 25க்கு பின் வழங்கப்படும். தற்போதே அடையாள அட்டை பெற விரும்புவோர், அரசு இ - சேவை மையங்களுக்கு சென்று, 25 ரூபாய் கட்டணம் செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம். புதிய வாக்காளர்களுக்கு, அடையாள அட்டை வழங்குவதற்காக, புதிய மென்பொருள் தயார் செய்துள்ளோம். இதன்மூலம், புதிய வாக்காளர்களுக்கு, ஜன., 25க்கு பின், அவர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும்.
அந்த எண்ணை, அரசு இ - சேவை மையங்களில் காண்பித்து, இலவசமாக அடையாள அட்டையை பெறலாம். புதிய அடையாள அட்டை வந்து சேரவில்லை என்ற புகாரை தவிர்க்க, இந்த ஏற்பாட்டை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை முதலிடம்! : வாக்காளர் எண்ணிக்கையில், சென்னை முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 20.07 லட்சம் ஆண்கள்; 20.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், 40.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெற்றுள்ளன. அரியலுார் மாவட்டத்தில், மிகக்குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில், 2.49 லட்சம் ஆண்கள்; 2.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், ஐந்து லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்
No comments:
Post a Comment