#இந்தவாரவண்ணக்கதிரில்
மாம்பழ வாசனையடிக்கும் உள்ளங்கை
-மணிகண்டபிரபு
புத்தகம் படிக்கும் பழக்கமுள்ள அனைவருக்கும் இவரை தெரிந்திருக்கும்.படிக்க படிக்க மனம் தெளிவடையும்.நுட்பமான எழுத்துக்களை படிக்கும்போது மட்டும் அறிவு விரிவடைகிறது.
கரடு முரடான எழுத்துக்களின் மூலம் கதை சொன்ன மேதாவிகளிலிருந்து விடுபட்டு.., மயிலிறகால் மனதை வருடி ரசிப்பு நிலையின் உச்சத்தை காணச் செய்தவர் வண்ணதாசன்.அகநிகழ்வை புகைப்படம் பிடித்துக்காட்டும் அற்புத கலைஞன்.
மனதை தொட்ட வரிகளை எழுதிவைக்கும் டைரி முழுவதையும் மனம் கமழச் செய்யும் இவரின் எழுத்துக்களை பகிர்கிறேன்
நெல்லையில் பிறக்கவில்லையே என ஏக்க பெருமூச்சு வரும்.இவரின்
முதல்கதை 1962 ல் ஏழையின் கண்ணீர்.1976ல் முதல் கதைத்தொகுப்பு கலைக்க முடியாத ஒப்பனைகள்.இவரின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு புத்தகமாகவே வந்துள்ளது.
சாரல் மழை பெய்யும் சூழலையும்,
மழைக்கு இதமாக பருகும் தேநீர் போன்ற இவரின் விவரிப்புகள்,கவனிக்க தவறிய முகங்களை பதிவு செய்யும் இவரின் சாதனைக்கு இன்னொரு மகுடம் இந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது.
மகிழ்ச்சியையும் சோகத்தையும் எளிதில் கடத்தும் இவரின் எழுத்துக்கள்.இவரின் உரைநடை தெருவில் காற்றில் பட்டு உருண்டோடும் பூக்களை போல மனம் லயிக்கும்.இதோ ஒரு உதாரணம்
"இடது உள்ளங்கையை வட்டமாகக் குவித்து,அதன் மேல் தாள் பூ இலையை வைத்து,வலது கையை அகல விரித்து அடிப்போம்.'டொப்' என்று சத்தம் வரும்.அது ஒரு விளையாட்டு.அது எல்லாவற்றையும் ஒரு விளையாட்டாக ஏற்றுக்கொள்கிற மனம் இப்போது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
மற்றொரு முறை மழையை பற்றி கூறும்போது..
மழை தான் பெய்கிற நேரத்தை அழகாகத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.
சிலசமயம் இரவு முழுவதும் விடியவிடிய.
சிலசமயம் விடியும்போது அதிகாலையில்.
ஒரு சிறுகதையோ கட்டுரையோ அதன் முதல் வரி முக்கியமானது.அந்த வகையில் வண்ணதாசன் எழுத்தை படிக்கும்போதே ஈர்ப்பு வரும்.அவ்வாறான அவரின் துவக்க வரிகள்..
"இப்போதெல்லாம் கனவுகள் அதிகம் வருவதில்லை.
நனவுகள் இப்படித்தான் இருக்கும் என கிட்டதட்ட யூகித்து விட முடியும் தினங்களில்,கனவுகள் தன் கண்ணாமூச்சி விளையாட்டை நிறுத்திவிடும் போல.
"மாம்பழ வாசனையடிக்கிற என் உள்ளங்கையை யாருடைய நாசியில் சற்றிப் பொத்தலாம்?
*மனம் வனமிருகங்களைப் போல நுட்பமானது
அதே போல் அவரின் எழுத்துக்கள் வாசகனின் கண்களிலிருந்து இன்னும் கொஞ்சம் படிக்கலாம் என கெஞ்சும்
அவரின் இறுதி வரிகள் இவ்வாறெல்லாம் முடிந்திருக்கும்
*விடை பெறுவதற்கும் விடை கொடுப்பதற்கும் போதுமானதாக இருந்தது.
*மழை பாருங்கள்..
மழையும் உங்களைப் பார்க்க விரும்புகிறது.
*அருவியும் ஒரு வேளை மெலிந்து இருக்குமோ?
*அகம் புறம் தொடரின் இறுதியில்
"இந்த நதி ஓடும்போது,இந்தப் படித்துறையில் குளிக்கிற நேரத்தில்,இந்தக் கல்மண்டபத்தில் அமர்ந்து இருக்கையில்,நான் அழகாக இருக்கிறேன்.உள்ளும் வெளியும் அழகு.உள்தான் வெளி.அகம்தான் புறம்.நான்தான் நீங்கள்! என்று
என்ன கவித்துவமான வரிகள்.
பார்த்தாலே இன்பம்.படித்தாலே பரவசம்.அவ்வாறாக மனம் தொட்ட இவரின் வரிகள்
*சிறுவயது தான் நம் கையை பிடித்துப் பெரிய வயதுக்குள் கூட்டிப்போகிறது
*உயிரையே அசைத்த கவிதை...👇🏿
பழைய சேலை கேட்டு ஒருத்தி
வாசலுக்கு வெளியே நிற்கிறாள்.
கூடுதல் அனுதாபத்திற்காக
எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டதாக
ஒரு பொய் சொல்கிறாள்.
வாசலுக்கு உட்புறம் இருப்பவர்கள்
இன்னொரு தடவை வந்தால்
தருவதாகச் சொல்கிறார்கள்.
தங்கள் கருணையை மெய்ப்பிக்க
இப்போதுதான் அனாதை விடுதிக்குக்
கொடுத்தோம் என்று
ஒரு பொய் சொல்கிறார்கள்
அந்தப் பக்கம் ஒரு பொய்யும்
இந்தப் பக்கம் ஒரு பொய்யுமாக
அசையாமல் இருக்கிறது வாசல் கதவு
உண்மையின் துருப்பிடித்த மௌனத்துடன்"!
*வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு
வேலைதான் வாழ்க்கையாகி விடுகிறது
*தூக்கம் வந்தவருக்கு இரவு சுகமாகிறது.வராதவருக்கு சுமையாகிறது என்பதுபோல் விளக்கும்..
*சில இரவுகளை கழிக்கிறோம்
சில இரவுகள் வாழ்கிறோம்
*கெட்டிக்காரத்தனம் என்பது
உப்பு மாதிரி
கொஞ்சம் கூடினால்
ரொம்ப கரிக்கும்
ருசி கெட்டுவிடும்
*முகங்களை விட
கால்களையே அதிகம்
உற்றுப்பார்க்க வேண்டும்.
அதுவும் சிரித்துக்கொண்டே
-செருப்புகடை சேல்ஸ்மேன்
*சிக்கல்களின் நெரிசல்களுக்கு
இடையில் மனிதர்கள் சதா
நோன்பிருப்பது அன்பெனும்
சிறுவரத்துக்கு மட்டும்
*எளிய தீர்மானங்கள் என்பது நாமே
மணல்வீடு கட்டிக்கொள்வது போல
நாமே கட்டி நாமே
சிதைத்துவிடுகிறோம்
*பண்டம் சுடுகிற அடுக்களை மண்
அடுப்பின் உட்பக்கத்து தணலும்
தணலின் சிவப்பில் ஜொலிக்கிற
அம்மா முகமும்
எவ்வளவு ஜீவன் நிரம்பியது
*என்ன செய்ய முடியும்
உங்களால்?
ஒதுக்கி தள்ளுவீர்கள்
என்ன செய்ய முடியும் என்னால்
ஒதுங்கி கொள்ளுவேன்
*மழையின் திருவிழாவில்
குழந்தைகள் உட்னடியாகவும்
நாம் சற்று தாமதமாகவும்
தொலைந்து போவேன்
*சிரிப்பது செளகரியமான பதிலாக இருக்கிறது
*ஓய்வு சிலசமயம்
அழகு தருகிறது
இயக்கம் சில சமயங்களில்
இன்னும் அழகு தருகிறது
*தலையில் உதிர்ந்து கிடக்கும்
வேப்பம் பூக்களை அப்படியே
விட்டுவிடுங்கள்
*வெளிப்படுத்துதலை விட
சிரம்மானது எளிமையாக
வெளிப்படுத்தல்
*திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறது அழகா? இரண்டாம் தடவை
பார்க்க முடியாம இப்படியே திகைக்க வைத்துவிட வேண்டும்.
அதுதான் அழகு
*எரிகிறபோது பார்க்காமல்
எப்போதும் அணைந்தபிறகுதான்
அதை சற்று அதிகம் பார்க்கிறோம்
இந்த கடைசி வரியினை படித்தால் அனைவருக்கும் உற்சாகம் கிளம்பும்
*எதுவும் தாமதமாகிவிடவில்லை
இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட
இன்னும் எவ்வளவோ
உயரங்களுக்கு போய்விட முடியும்
எழுத்துக்களை போலவே எளிமையான மனிதராய் விளங்கும் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டு விருது கிடைப்பதில் அவருக்கு இருக்கும் மகிழ்ச்சியை விட இரு மடங்கு மகிழ்ச்சி எங்களுக்கு உண்டு
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment