வாகன காப்பீட்டில், மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை பிரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்தியாவில், பொதுத்துறை, நான்கு; தனியார் துறை 21, என மொத்தம், 25 பொது காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. புதிய வாகனம் வாங்கும்போது, காப்பீட்டு நிறுவனங்களிடம், மூன்றாவது நபர் மற்றும் உரிமையாளர் என, இரண்டு காப்பீடுகள் செய்யப்படுகின்றன.
பணமாக பெறலாம்: விபத்து, தீ, திருடு என, ஏதேனும் ஒரு காரணத்தினால், வாகனம் மற்றும் அதில் பயணம் செய்தவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனங்களிடம், இழப்பீட்டை பணமாக பெற்று கொள்ளலாம். இதற்கு ஆண்டுதோறும், பிரீமியம் செலுத்தி, காப்பீட்டை புதுப்பித்து கொள்ள வேண்டும். ஆனால் பலர், மறதி காரணமாக, ஆண்டு பிரீமியம் செலுத்த தவறி விடுகின்றனர். இதனால், விபத்து ஏற்படும்போது, இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, புதிய வாகனம் வாங்கும்போது, ஆயுட்கால சாலை வரி வசூலிப்பது போல், வாகன ஆயுள் காப்பீட்டு திட்டத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள், மத்திய அரசிடம், கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மூன்று ஆண்டுக்குமாக சேர்த்து, ஒரே பிரீமியம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம், கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதை, விரைவில் செயல்படுத்த, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதால், வாகன ஓட்டிகள், ஆண்டுதோறும், பிரீமியம் செலுத்த சிரமப்பட வேண்டியதில்லை. இதுகுறித்து, தென் மண்டல பொது காப்பீட்டு ஊழியர் சங்க பொது செயலர், ஆனந்த் கூறியதாவது:
பொது காப்பீட்டில், கட்டடங்களில், தீ விபத்திற்கு, 10 ஆண்டுக்கு, ஒரே பிரீமியம் செலுத்தும் வசதி உள்ளது. தற்போது, வாகனத்திற்கு, மூன்று ஆண்டுக்கு, ஒரே பிரீமியம் செலுத்தும் திட்டத்தை துவக்க, காப்பீடு நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன. பிரச்னை இல்லை: இதனால், ஆண்டு தோறும், பிரீமியம் செலுத்த மறந்தாலும், பிரச்னை இல்லை. ஆனால், அதற்கு மேல், பிரீமிய காலம் நீட்டிக்கப்பட்டால், வாகன விலையை, பிரீமியமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார். இந்த நடைமுறை, ஏப்ரல், 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment