அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இரண்டு மாதங்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக பொதுநல வழக்குகளுக்கான தமிழ்நாடு மையத்தின் நிர்வாக அறங்காவலர் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: பள்ளிகளிலும், இதரக் கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள், ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பாலியல் தொந்தரவு உள்ளிட்ட தீமைகள் நீடித்தால், மாணவர் சமுதாயம் அவர்களது ஒழுக்க நெறிகளிலிருந்து தவறி, இந்த சமுதாயம் மிகவும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். எனவே, அனைத்து அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் வளாகம், வகுப்பறைகளில் மாணவர்கள், ஆசிரியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்த வேண்டும்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி மனு அளித்தேன். ஆனால், அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்தக் கோரிக்கை குறித்து இரண்டு மாதங்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment