அரசின் சார்பில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் இலவச உபகரணங்களை, பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை இலவச பொருட்களுக்கான கொள்முதலை துவக்கி உள்ளது. பொருட்கள் அனைத்தையும், ஏப்ரல் கடைசி வாரத்துக்குள் கொள்முதல் செய்து, மே மாதத்தில் பள்ளிகளுக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளனர்.
14 வகை:அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகிறது. நான்கு செட் சீருடை, கம்பளிச் சட்டை, பாட நுால், நோட்டு புத்தகம், புத்தகப்பை, கணித உபகரண பெட்டி , கிரையான்ஸ் (வண்ண பென்சில்கள்), நில வரைப்படம், காலணி, சைக்கிள், இலவச பஸ் பாஸ், லேப்-டாப் ஆகியன வழங்கப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இலவச பொருட்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு, ஒரு மாதத்துக்கு பின், மூன்று மாதங்களுக்குள் வழங்கப்படுவது வழக்கத்தில் இருந்து வந்ததது.
2014 - -15ம் கல்வி ஆண்டில், பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசின் நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.அதே நடைமுறையை வரும் கல்வி ஆண்டு (2015 - -16ல்) நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரி கள் முடிவு செய்து, பொருட்களை கொள்முதல் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு கோடியே, 10 லட்சம் புத்தகங்களை பாட நுால் கழகம் தயார் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.சைக்கிள், 2013- - 14ல், 6.30 லட்சம் பேருக்கும்; 2014 - -15ல், 6.30 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதால், 2015- - 16ல், 6.40 லட்சம் பேருக்கு வழங்குவதற்கு டெண்டர் விடுவதற்கான பணி நடந்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குனர் ஒருவர் கூறியதாவது:
தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து இலவச பொருட்களும், வரும் கல்வி ஆண்டு, கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும், ஜூன் 1ம் தேதி திங்கட்கிழமையில் வழங்கி முடிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.அரசால் வழங்கப்படும், 14 வகையான இலவசங்களையும், ஏப்ரல் மாதத்துக்குள் கொள்முதல் செய்து முடிக்கப்பட்டு, மே மாதத்தில் மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். சுற்றறிக்கை மூலம்...மே கடைசி வாரத்தில், அதை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களிடம் உறுதி செய்து கொள்ளும் வகையில், தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் சுற்றறிக்கை மூலம் இலவச பொருள் வினியோகம் குறித்த விதிமுறை அனைத்தும் தெரிவிக்கப்படும், என்றார்.
இலவச சீருடைகளுக்கு டெண்டர் பணி ஆரம்பம்: ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், விருதுநகர், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது. இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி நிறைவு பெற்றதால், விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் வேலையின்றி உள்ளனர்.நடப்பாண்டுக்கு, மூன்று கோடி மீட்டர் இலவச சீருடை உற்பத்தி செய்யவதற்கான ஆர்டர் கிடைக்கும், என நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இலவச சீருடை :உற்பத்திக்கு டெண்டர் விடுவதற்கான விண்ணப்பங்களை, கைத்தறி மற்றும் துணி நுால் துறை மூலம் பெறப்படுகிறது. அடுத்த வாரத்தில் இதற்கான பணி முழுமை பெற்று விடும் என்றும், அதன் பின், உற்பத்திக்கான ஆர்டர் கிடைக்கும், என நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment