''தமிழகத்தில் உள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும், மார்ச் இறுதிக்குள், ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தப்படும்,'' என, சென்னை வட்ட, தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள, 1.55 லட்சம் தபால் நிலையங்களில், தகவல் தொடர் தொழில் நுட்பத்தை புகுத்த, 4,909 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 'கோர் பேங்கிங் - சி.பி.எஸ்., ' வசதியை ஏற்படுத்த, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன் முறையாக, சென்னை, தி.நகர் அஞ்சலகத்தில், 'கோர் பேங்கிங் - ' வசதி, 2013 டிசம்பர், 23ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையின் கீழ், அஞ்சலகங்களில், சேமிப்பு கணக்கு மற்றும் அஞ்சலக தொடர் வைப்பு திட்டமான - ரெக்கரிங் டிபாசிட் ஆகியவை சி.பி.எஸ்., திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன. அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், 'கோர் பேங்கிங்' வசதி உள்ள, எந்த ஒரு அஞ்சலகத்தில் இருந்தும், தங்களது பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதுகுறித்து தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் கூறுகையில்,''தமிழகத்தில், 1,500 அஞ்சலகங்களில்,'கோர் பாங்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள அஞ்சலகங்களில், இந்த வசதியை ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. மார்ச், 31ம் தேதிக்குள், தமிழகம் முழுவதும் உள்ள, 94 தலைமை அஞ்சலகங்களில், ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment