"ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்; இல்லையெனில், கிராமப்புறங்களில் வீடுகள் கட்டும் திட்டம், மக்கள் நலவாழ்வு ஓய்வூதியத் திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் நிதி நிறுத்திவைக்கப்படும்'' என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவிக்கையில், "சமூகப் பொருளாதார, ஜாதிவாரியான கணக்கெடுப்பை அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் நிறைவு செய்யும் வகையில், அதற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளை மீண்டும் அறிவுறுத்தியுள்ளோம்' என்றனர்.
இதுதொடர்பாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2015-16ஆம் நிதியாண்டு முதல், சமூகப் பொருளாதார மற்றும் ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு (எஸ்இசிசி) தகவலை அடிப்படையாகக் கொண்டே இந்திரா வீட்டு வசதித் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம் (என்எஸ்ஏபி) ஆகியவற்றின் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஆகையால், இந்தக் கணக்கெடுப்பு மூலம் பயனாளிகளைத் தேர்வு செய்யாத மாநிலங்களுக்கு, மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், "அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள், இந்தக் கணக்கெடுப்பை மாநிலங்கள் நடத்தி முடிக்கவில்லையென்றால், மத்திய அரசின் இந்திரா வீட்டு வசதித் திட்டம், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய கைம்பெண்கள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், தேசிய குடும்ப நல ஓய்வூதியத் திட்டம், அன்னபூர்ணா ஆகிய திட்டங்களின் கீழ் பலனடைந்து வரும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள்' என்றன.
கடந்த 2011ஆம் ஆண்டு, நாடு முழுவதும் சமூகப் பொருளாதார, ஜாதி ரீதியான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. ஆனால், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சரியாக ஒத்துழைக்காததால், அந்தக் கணக்கெடுப்பு இதுவரை நடத்தி முடிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தன்னார்வ அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்தது. அதில், ஜாதிவாரியான கணக்கெடுப்பை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் நடத்தி முடிக்காததால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்தே, மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை பிறப்பித்திருப்பதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment