வாக்காளர்கள் தங்களது கூடுதல் விவரங்களைச் சேர்க்கவும், சரிசெய்யவும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
இந்திய தேர்தல் ஆணையம் தேசிய அளவில் "போலிகளே இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் திட்டத்தை' வரும் மார்ச் 3-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர்கள் இடம்பெற்றுள்ளவர்கள் தானாக முன்வந்து அதை நீக்கவும், வாக்காளரின் விவரங்களில் திருத்தம் செய்யவும், ஆதார் எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ள வாக்காளர்கள் தங்கள் பெயரை நீக்க படிவம் 7-யும், வாக்காளர் விவரங்களில் திருத்தம், ஆதார் எண் உள்ளிட்டவற்றைச் சேர்க்க படிவம் 8-யும் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியை மேற்கொள்ளும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஆகியோர் இந்த படிவங்களைப் பெற்று, கள ஆய்வு செய்தபின் 15 நாள்களுக்குள் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது சரியான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment