மாணவியர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரும் போதும், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்கள் குழுவாக, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடித விபரம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பள்ளிக்கு வருகை தரும்போதும் தனித்தனியாக செல்லாமல், மாணவிகள் சிலர் சேர்ந்து குழுவாக பாதுகாப்பாக செல்லவேண்டும். இது குறித்து பெற்றோர்களை கூட்டி, தக்க அறிவுரைகள் வழங்கும்படியும் தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கூட மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஆட்டோ ரிக்க்ஷாக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் மாணவர்கள் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இது குறித்து இறைவணக்க கூட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். டெங்கு, சிக்குன் குன்யா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் மூலம் தக்க அறிவுரை வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்களுக்கு எட்டக்கூடிய வகையில் மின்சாதன பொருட்கள் இருக்கக்கூடாது.
மின்சார வயர்கள் செல்வதை அனுமதிக்கக்கூடாது. மாணவ-மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தையும், நல்ல நெறிமுறைகளையும் பின்பற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு உடற்பயிற்சி, யோகா கற்றுத்தருவதை உறுதிப்படுத்த வேண்டும். மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போதும், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment