மாணவர்களின் வருகையை காரணம் காட்டி மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து 7–ந் தேதி மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
சென்னை மாநகராட்சி பகுதியில் இதுவரை 54 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி முழுவதும் முறையாக செலவிடப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் கல்விக்காக வசூலிக்கப்பட்ட 2.5 சதவீதம் வரித்தொகையில் ரூ.175 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் 168 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாணவர்கள் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஆங்கில வழிக்கல்விக்கும் தேவையான மொழியாசிரியர்களை நியமிக்கவில்லை. 120–க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிவறைகளே இல்லை. எனவே மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்தும், பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் 7–ந் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்த போராட்டத்திற்கு நான்(ஜி.ராமகிருஷ்ணன்) தலைமை தாங்குகிறேன்.
No comments:
Post a Comment