பி.எட். கணிதப் பிரிவில் மொத்தமுள்ள இடங்களில் 42 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. மீதமுள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி வெள்ளிக்கிழமை முதல் நடத்தி வருகிறது. கலந்தாய்வின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கணிதம் மற்றும் புவியியல் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.
கணிதத்தில் மொத்தமுள்ள 438 இடங்களுக்கு, 520 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர். இதில் அரசுக் கல்லூரிகளில் உள்ள கணிதப் பிரிவு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் 42 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. இதுபோல் புவியியல் பிரிவில் மொத்தமுள்ள 38 இடங்களில், 35 இடங்கள் நிரம்பிவிட்டன. மூன்று இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. திங்கள்கிழமை (செப்டம்பர் 2) விலங்கியல் மற்றும் தமிழ் பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. விலங்கியல் பிரிவில் உள்ள 200 இடங்களுக்கு 250 மாணவ, மாணவிகளும், தமிழ்ப் பிரிவில் மொத்தமுள்ள 114 இடங்களுக்கு 200 பேரும் அழைக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கைச் செயலர் ஜி. பரமேஸ்வரி கூறினார்.
No comments:
Post a Comment