உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு மொத்தம் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த பணி நியமனம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு நிலைகளில் நடைபெற உள்ளது. தமிழகம் 7 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை, விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி, சேலம், கோவை, மதுரை ஆகிய 7 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் அனுபவங்களை எவ்வாறு கணக்கிடுவது, பணி அனுபவம் மற்றும் கல்வித் தகுதிக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக விளக்கமளிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாக வரையறுத்து ஏற்கெனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் பணி அனுபவத்துக்கான மதிப்பெண் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்படும். கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்ணும், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்ணும் வழங்கப்படும். கல்வித் தகுதியைப் பொருத்தவரையில், பி.எச்டி. முடித்தவர்களுக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்ணும், எம்.பில். மற்றும் நெட் அல்லது ஸ்லெட் முடித்தவர்களுக்கு 6 மதிப்பெண்ணும், முதுநிலைப் பட்டத்தோடு நெட் அல்லது ஸ்லெட் முடித்தவர்களுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்பட உள்ளது.
அதேபோல், பணி அனுபவத்தைப் பொருத்தவரையில் யு.ஜி.சி. விதிமுறைகளின் படி உரிய தகுதிகளைப் பெற்ற பிறகு உள்ள அனுபவம் மட்டுமே கணக்கில் எடு்த்துக்கொள்ளப்படும். ஒரு ஆண்டுக்கு 2 மதிப்பெண் வீதம் அதிகபட்சம் 15 மதிப்பெண் வரை பணி அனுபவத்துக்கு வழங்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த பிறகு, மொத்தம் 24 மதிப்பெண்ணுக்கு விண்ணப்பதாரர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும். தரவரிசைப் பட்டியலில் இருந்து 1:5 என்ற வீதத்தில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் எனத் தெரிகிறது. நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1,093 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment