தகுதி தேர்வு மத்திய அரசு கொண்டு வந்த குழந்தைகள் இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 1–4–2010 அன்று அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். இதனடிப்படையில், தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மட்டுமே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி வழங்கப்படும் என்று 15–11–2011 அன்று அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து டி.எஸ்.அன்பரசு, என்.பரந்தாமன் உட்பட 94 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:–
32 ஆயிரம் பேர் தேர்வு சுப்ரீம் கோர்ட்டு 20–8–2008 அன்று பிறப்பித்த உத்தரவில், ஆசிரியர் பணிக்கு மாநில பதிவு மூப்பு பட்டியலின் அடிப்படையில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்து ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதனடிப்படையில், உதவி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி தேர்வு செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 32 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொண்டோம். இந்த தேர்வு நடவடிக்கைகள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி 2010–ம் ஆண்டு மே மாதம் நடந்து முடிந்துவிட்டது. அப்பீல் தள்ளுபடி இந்த நிலையில், தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், தேர்வு நடவடிக்கையை ரத்து செய்தும், எங்களுக்கு பணி வழங்க மறுத்தும் தமிழக அரசு உத்தரவிட்டது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு உதவி பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மறுபரிசீலனை மனு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்து, 1–3–2012 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தாக்கல் செய்த அப்பீல் வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்ச் 13–7–2012 அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மனுதாரர்கள் அன்பரசு, பரந்தாமன் உட்பட பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:– குழந்தைகள் இலவசம் மற்றும் கட்டாயம் கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு கண்டிப்பாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 23–8–2010 அன்று ஒரு அறிவிக்கை வெளியிட்டது. வேலை வழங்க வேண்டும் அந்த அறிவிக்கையில், பிரிவு 5–ல், ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு, சான்றிதழ் சரி பார்க்கும் பணி முடிவடைந்து விட்டால், அதில் தேர்வானவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாய தகுதியாக கொள்ளத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரிவை தனி நீதிபதியும், டிவிஷன் பெஞ்சும் கவனிக்க தவறிவிட்டது.
எனவே இந்த மறுபரிசீலனை மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, தற்போது உதவி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லை என்று கூறினார். எனவே மனுதாரர்களை ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வற்புறுத்தாமல், எதிர்காலத்தில் ஏற்படும் காலியிடங்களை இவர்களை கொண்டு நிரப்பவேண்டும் என்று உத்தரவிடுகிறோம்.
No comments:
Post a Comment