முதல் தாளுக்கு 2 லட்சத்து 65 ஆயிரத்து 568 பேரும், இரண்டாம் தாளுக்கு 4 லட்சத்து 19 ஆயிரத்து 898 பேரும் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ம் தேதியும் நடைபெற உள்ளது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த இணையதளத்திலிருந்து தங்களுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தையும், பத்திரிகைகளையும் தொடர்ச்சியாக பார்த்து வர வேண்டும். ஹால் டிக்கெட் பதிவேற்றம் போன்ற தகவல்கள் இணையதளத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. 29 ஆயிரம் பேர் அதிகம்: கடந்த 2012-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு 29 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கான
விண்ணப்பங்கள் ஜூன் 17-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் வழங்கப்பட்டன. மொத்தம் 7.38 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேர்வர்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேரடியாகச் சமர்ப்பித்தனர். கடைசி நாளான திங்கள்கிழமை மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களில் இந்த விண்ணப்பங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, அதில் உள்ள தகவல்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அதன் பிறகு, மாவட்டத்துக்கு எத்தனை தேர்வர்கள் என்ற எண்ணிக்கையைப் பொருத்து தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இணையதளம் மூலமே ஹால்டிக்கெட்டுகள்: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளுக்கும் இனி ஹால் டிக்கெட்டுகள் தபாலில் அனுப்பப்படாது என்றும், இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
No comments:
Post a Comment