தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கும், முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட மாநில அளவிலான பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில், சமச்சீர் கல்வி முறையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரு ஆண்டு முழுவதும் பாடத்திட்டங்களை வகுக்காமல், ஓராண்டை மூன்று பருவங்களாக பிரித்து, அதற்கேற்ப பாடத்திட்டங்கள் பிரிக்கப்பட்டு, புத்தகங்களாக்கப்பட்டன. இதனால் பள்ளி மாணவர்களின் புத்தக சுமை மூன்றில் ஒரு பங்காக குறைந்தது.
அதே போல், தேர்வின் மூலம் பெறப்படும் மதிப்பெண்ணை மட்டுமே வைத்து, ஒரு மாணவனின் திறன் மதிப்பிடப்பட்டு வந்தது. அந்த முறையையும் மாற்றி, தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டது. இதில் தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமின்றி, மாணவனின், உற்றுநோக்கும் திறன், ஒழுக்கம், விளையாட்டு, தனித்திறன் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மதிப்பெண் வழங்கப்பட்டு, திறன்கள் மதிப்பிடப்படுகிறது. கடந்த ஆண்டு எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்ட இம்முறை, வரும் கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்புக்கும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மே, 6,7 ம்தேதிகளில் சென்னையில் நடக்கிறது. இதில் மாவட்டந்தோறும், ஒவ்வொரு பாடங்களிலும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment