சென்னை கே.கே. நகரில் உள்ள பத்மசேஷாத்திரி மேல்நிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் ரஞ்சன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானான். இதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகி யோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு ஆஜரான மூத்த வக்கீல் விஜயநாராயணன், வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் இருவரும் மாணவன் ரஞ்சன் பலியானது குறித்து முறையீடு செய்தனர். உடனே தலைமை நீதிபதி இக்பால், உங்கள் முறையீட்டை மனுவாக கொடுங்கள். உடனே விசாரிக்கிறோம் என்றார். இதையடுத்து வக்கீல் கார்த்திக்ராஜா, மாணவன் ரஞ்சன் பலியானது குறித்து பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:- பள்ளி மாணவ-மாணவிகள் விபத்துக்களில் பலியாவது தினமும் நடந்தபடி உள்ளது. இது பெற்றோர்களை கவலை அடைய செய்துள்ளது. கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பள்ளியில் மாணவன் ரஞ்சன் பலியான சம்பவத்தின் பின்னணியில் பல தகவல்கள் உள்ளன. அந்த பள்ளியில் மாணவர்கள் நீச்சல் பயிற்சி பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கு சம்மதிக்க பெற்றோர்களும் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகள் பணம் சம்பாதிப்பதற்காக இப்படி பல பயிற்சிகள் அளிப்பதாக போலி வேடம் போடுகிறார்கள். மாணவன் ரஞ்சன் மரண சம்பவம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நீச்சல் குளம் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகத்தினர் கவனக்குறைவாக இருந்துள்ளனர். அவர்கள் மாணவர்கள் பாதுகாப்புக்காக எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இப்படி அசட்டையாக இருந்தவர்கள் மீது தமிழக கல்வித்துறை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த தனியார் பள்ளி நிர்வாகிகளை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க செய்வது காப்பாற்றவே முயற்சிகள் நடந்து வருகிறது. சேலையூரில் பஸ் ஓட்டையில் இருந்து விழுந்து மாணவி ஸ்ருதி பலியானபோது, அந்த பள்ளி நிர்வாகிகள் மீது 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்விளையாட்டரங்கம் இடிந்து 10 பேர் பலியானபோது, அந்த கல்லூரி நிறுவனர் ஜேப்பியார் மீது 304(2) மற்றும் 338 ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டப் பிரிவுகள் ஜாமீனில் வெளியில் வரமுடியாத பிரிவுகள் ஆகும். ஆனால் மாணவன் ரஞ்சன் பலியான விஷயத்தில் மட்டும் அந்த பள்ளி நிர்வாகிகள் மீது எளிதில் ஜாமீனில் வெளியில் வரும் வகையில் 304(ஏ) என்ற பிரிவில் போலீசார் சாதாரண வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். உயிரிழப்பை ஏற்படுத்திய பத்மசேஷாத்திரி பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும், கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுபற்றி உயர்மட்டக் குழு ஒன்றை ஏற்படுத்தி விசாரிக்க வேண்டும். கவன குறைவாக இருந்ததற்காக பத்மசேஷாத்திரி பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிடவேண்டும். மேலும் பள்ளிகளில் நீச்சல் குளம் அமைக்க தடை விதித்து உத்தரவிடவேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவம் நடைபெறாமல் இருக்க உயர்மட்டக் குழு ஒன்றை உருவாக்கி பாதுகாப்பு விதிகளை வகுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்கு என்று கண்காணிப்பு குழு உருவாக்க வேண்டும். அந்த குழுக்களை செயல்பட வைக்க ஒரு உயர்மட்ட கமிட்டி மாநில அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment