அசாம் மாநிலத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் சில இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதன் காரணமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். இத்தாக்குதல் திட்டமிட்டு அந்நிய சக்திகளால் நடத்தப்படுவதாக பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மன்மோகன்சிங், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் வடகிழக்கு மாநில மக்கள், தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கருதி, அங்கிருந்து வெளியேறுகின்றனர். இது வதந்திகளால் ஏற்பட்ட அச்ச உணர்வு ஆகும். இவ்வாறு பரப்பப்பட்ட வதந்தி கடும் கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்தார். உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பேசுகையில், வடகிழக்கு மாநில மக்கள் நாடு முழுவதும் வசிக்கின்றனர். அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதனை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சர்வதேச அளவில் யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே வடகிழக்கு மக்கள் அவர்கள் வசித்த இடங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள். மொத்த நாடும் உங்களுடையதுதான். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றார். இதையடுத்து, செல்போன்கள் மூலம் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். செய்திகளை மொத்தமாக அனுப்புவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று முதல் 15 நாட்கள் அமலில் இருக்கும். ஒரு மொபைல் இணைப்பில் இருந்து அதிகபட்சம் 5 எஸ்.எம்.எஸ். மற்றும் 3 எம்.எம்.எஸ். வரை அனுப்பலாம். எம்.எம்.எஸ். பைல்கள் 25 கே அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நாடு முழுவதும் இந்த தடை அமலில் இருக்கும் என்று உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment