:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள், இன்றும், நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் மீது, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, மத்திய தொழிலாளர் கமிஷனர் முன், இந்திய வங்கிகள் சங்கம் ஒப்பு கொண்டது. பிறகு அதை ஏற்க மறுத்தது. இதையடுத்து, வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம், ஆக., 22, 23 ஆகிய இரண்டு நாள், அகில இந்திய வங்கி வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இதுகுறித்து, வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றத்தின் தமிழக அமைப்பாளர் பாஸ்கரன், தமிழக வங்கி ஊழியர் சம்மேளனம் பொது செயலர் வெங்கடாசலம் ஆகியோர் கூறியதாவது:நாடு முழுவதும் நடைபெறும் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில், தமிழக வங்கி ஊழியர் சம்மேளனம் உட்பட, ஒன்பது சங்கங்கள் பங்கேற்கின்றன. வேலை நிறுத்த போராட்டத்தில், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என, மொத்தம், 10 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். "வங்கி சீர்திருத்தம்' என்ற பெயரில், வங்கி ஒழுங்குமுறை சட்டம், வங்கி தேசிய மயமாக்கப்பட்ட சட்டம் என, இரண்டு சட்ட திருத்த மசோதாக்களை, மத்திய அரசு, இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்கிறது.அதில், தனியார் நிறுவனங்கள் வங்கி சேவைகளைத் துவக்க, உரிமம் வழங்குவது, வங்கிகளின் பங்குதாரர்களுக்கு உள்ள ஓட்டுரிமையை அதிகரிப்பது, வங்கிகளில் காலியாக உள்ள இரண்டு லட்சம் நிரந்தர பணியிடங்களில், ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பது போன்றவை இடம்பெற்றுள்ளன. இதை கைவிட வேண்டும். மேலும், கிராமப்புறங்களில் செயல்படும் வங்கி கிளைகளை மூடுவதை நிறுத்த வேண்டும். ஊழியர்களுக்கு சமமான ஊதியத்தை தராமல், நபர், பணிகளுக்கு ஏற்ப, மாறுபாடான ஊதியத்தை தருவது போன்றவை, காண்டேவால் கமிட்டி பரிந்துரையில் இடம் பெற்றுள்ளன. இதையும் திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு நாள் போராட்டம் நடைபெறும்.தமிழகம் முழுவதும், 7,600 வங்கி கிளைகளும், சென்னையில், 1,400 வங்கி கிளைகளும் மூடப்படும். வங்கி ஊழியர்களின் சிறு, சிறு கோரிக்கைகள் கூட, தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதை மத்திய அரசு கைவிட வேண்டும். அதேபோல், கருணை அடிப்படையிலான பணி நியமன முறையை, மீண்டும் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.
No comments:
Post a Comment